Ayodhya Temple: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் சுமார் 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. 


தீப உற்சவம்:


நாளை (நவம்பர் 12) இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் குவிந்துள்ளதால் தீபாவளி வியாபாரமும் களைகட்டியுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர்.


இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை ஜனவரி 24ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டது.  இந்த ஆண்டு ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், உலக சாதனை நிகழ்ச்சி போல 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட திட்டமிடப்பட்டது.   






22 லட்சம் விளக்குகள்:


இந்த தீப உற்சவத்திற்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீ உற்சவத்திற்கு ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.  அதன்படி, தீப உற்சவ நிகழ்ச்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.  பின்னர், அயோத்தி முழுவதும் சுமார் 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் 22 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. 25,000 தன்னார்வத் தொண்டர்கள், ஒரே நேரத்தில் தீபங்களை ஏற்றி வைத்துள்ளனர். இந்த தீப உற்சவத்தில் எத்தனை விளக்குகள் ஏற்றப்படுகிறது? என்பதை ட்ரோன் கேமராக்கள் கண்காணிக்கும்.  இந்த தீப உற்சவத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேலும், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா உட்பட அம்மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். 






இதனிடையில், அயோத்தி ராமர் கோயிலில் 22 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் ஜொலித்தது. தீப உற்சவத்தில் முந்தைய ஆண்டுகளை முறியடிக்கும் வகையில், 22 லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் சுமார் 20 ஆயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, 15 லட்சம் விளக்குகளை ஏற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.