ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார்.
செம்ம பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்:
இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறி கொடுக்க, தெலுங்கு தேசம் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
தெலங்கானாவை பொறுத்தவரை, கடந்த 9 ஆண்டுகளாக கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆதிக்கம்தான் தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தெலங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தெலங்கானாவில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டும் இன்றி, பல்வேறு விதமான உத்திகளுடன் மக்களை ஈர்க்கும் வகையில் பரப்புரை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி மற்றும் பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர் கேசிஆர் ஆகியோரை பாஜக இயக்குவது போன்ற பேனர்களை ஹைதராபாத் நகரில் காங்கிரஸ் வைத்துள்ளது.
புதுவிதமான பிரச்சார உத்தி:
குறிப்பாக, ஹைதராபாத் நகரை பொறுத்தவரை, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஏபிபி - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் முக்கிய தகவல் வெளியாகியிருந்தது.
வெளியான முதல் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சியும் இரண்டாவது கருத்துக்கணிப்பில் பிஆர்எஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆட்சி அமைப்பதற்கு ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், ஹைதராபாத் நகரில் ஒவைசி மற்றும் கேசிஆரை குறிவைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஹைதராபாத் நகருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி வர உள்ள நிலையில், காங்கிரஸ் இம்மாதிரியான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.