இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகள் பீதியடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர்.


உலக நாடுகளை உலுக்கும் நிலநடுக்கம்:


இதேபோல, கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. நேபாளத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியிருந்தது. 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, நேபாளத்தில் ஏற்படும் மிக மோசமான நிலநடுக்கும் இதுவாகும்.


இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் எதிரொலித்தது. டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது. 


டெல்லி அதிர்வு:


இந்த நிலையில், டெல்லியின் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 3:30 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "3:36 மணிக்கு, இன்று ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.6ஆக பதிவாகியுள்ளது. 10 கி.மீ. ஆழம் வரை, நில அதிர்வு பதிவாகியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 






அச்சத்தில் டெல்லி மக்கள்:


ஏற்கனவே, மோசமான காற்று மாசுபாட்டால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம் டெல்லி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக இந்தியாவின் முக்கிய நகரங்கள், வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. 


நாட்டின் முக்கிய முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் IQAir தகவல் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.