PM Modi Visit TN: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை.. ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. முழு விவரம் இதோ..

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார்.

Continues below advertisement

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம், ரூ.19, 850 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்  காலை 10.30 மணியளவில் ஆளுநர் தலைமையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 33 பேருக்கு பிரதமர் மோடி பட்டமளித்து உரையாற்றுகிறார்.

Continues below advertisement

பின் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய முனையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், அங்கு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடக்கும் விழாவில், ரூ.1,112 கோடி மதிப்பிலான விமானநிலைய புதிய முனையம், திருச்சி என்.ஐ.டியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி, சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி - மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதுமட்டுமின்றி 5 சாலை திட்டங்கள், காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2 ஐ  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை என  ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து  மதியம் 1 மணி அளவில் லட்சத்தீவு சென்று அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி நாளை வருகை தரும் போது விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல, பாஜக சார்பில் 7 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Continues below advertisement