Election Results 2023: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மிசோரமில் மட்டும் நாளை (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


5 மாநில தேர்தல்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி,  மிசோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட உள்ளன. மிசோரம் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. குறிப்பிட்ட தெலங்கானா தவிர்த்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால், இந்த தேர்தல் முடிவுகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.



சத்தீஸ்கர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:  


90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக கடந்த 7ம் தேதி 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 17ம் தேதி 70 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குபதிவு நடைபெற்றது. இரண்டு கட்டத்திலும் சேர்த்து சுமார் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ராஜஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:  


200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்த மாநிலத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 74.13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மத்தியபிரதேசம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:  


230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்த மாநிலத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், மத்தியபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை:


119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்த மாநிலத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 70.60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.