Tirupati Temple: திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் 22ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில்:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற பல நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டணம் செலுத்தியும் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க வரும் 22ம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டிக்கெட்:
இதுதொடர்பாக திருமலையில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி பேசுகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். குளிர் மற்றும் மழை காரணமாக பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக திருப்பதியில் 10 இடங்களில் 94 கவுன்டர்களில் வருகிற 22ம் தேதி முதல் நேர ஒதுக்கீடு இலவச டோக்கன்கள் வழங்கப்படும். மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
டிக்கெட்டுகள் எங்கு விநியோகிக்கப்படும்?
திருப்பதியில் உள்ள இந்திரா மைதானம், ராமச்சந்திரா புஷ்கரணி, சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி இரண்டாவது சத்திரம், பைராகிப்பட்டேடாவில் உள்ள ராமாநாயுடு மேல்நிலைப்பள்ளி, எம்.ஆர்.பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி, ஜீவகோனாவில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், திருமலையில் உள்ள உள்ளூர் மக்களுக்காக கவுஸ்துபம் ஓய்வறையிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பக்தர்களுக்கான அறிவுரை:
எனவே வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம்தேதி வரையிலான 10 நாட்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது 22ம்தேதி முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு இலவச சர்வ தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 22, 24, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 முதல் 30ம் தேதி வரை பக்தர்கள் இல்லாமல் இந்த சேவைகள் நடைபெறும்.
23 முதல் ஜனவரி 1ம்தேதி வரை சகஸ்ர தீப அலங்கார சேவை பக்தர்கள் இல்லாமல் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார். வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
டிசம்பர் 17 முதல் ஜனவரி 14ம் தேதி வரை மார்கழி மாதம் என்பதால் காலையில் சுப்ரபாத சேவைக்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் நடைபெறும். 28ம் தேதி திருமலையில் பிரணாயகலக உற்சவம் நடைபெறுகிறது” என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.