இயற்கை எழிலும், கொஞ்சும் பசுமையும் கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமாக அறியப்படுவது அசாம். இயற்கைக்கு மட்டுமில்லாமல், தேயிலை உற்பத்திக்கும் பட்டு உற்பத்திக்கும் பிரபலமானது. உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத பல அரிய விலங்கினங்களையும், தாவர வகைகளையும் கொண்டுள்ளன அசாம் காடுகள். இங்குள்ள காடுகளில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக காசிரங்கா தேசிய பூங்காவில் பிரத்யேக விலங்குகளை காணலாம். அப்படி அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் சமீபத்தில் ஒரு அரிய வெள்ளை பன்றி மான் காணப்பட்டது, இந்த விலங்கை இந்தியாவில் காண்பது இது இரண்டாவது முறை ஆகும்.



இந்த அரியவகை வெள்ளைப் பன்றி மான் வனாந்தரத்தில் உலாவுவது சமூக ஊடகங்களில் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் வெளியிடப்பட்டு வைரலான இந்த விடியோவில், பூங்காவின் கோஹோரா பகுதியில் 'அல்பினோ ஹாக் மான்' வெள்ளை நிறத்தில் உலா வருவதைக் காணலாம். மற்ற மான்களின் சகவாசத்தில் வசதியாக வாழும் வெள்ளைப் பன்றி மான் நகர்ந்து செல்லும்போது புல்லை முகர்ந்து பார்க்கிறது. அரிதாக காணப்படும் இந்த வெள்ளை பன்றி மான் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் 16 அன்று இந்த விடியோ வெளியிடப்பட்டதில் இருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை கண்டுள்ளனர். இந்த அரிய வகை வெள்ளை மானை கண்டு மக்கள் திகைத்தனர்.






முன்னதாக ஜூன் மாதம், வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவர் புராபஹர் மலைத்தொடரில் ஒரு அரிய வெள்ளைப் பன்றி மானைப் புகைப்படம் எடுத்தார், அந்தப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர்வாசிகள் அந்த அரிய விலங்கு இருக்கும் இடத்தைப் பற்றி புகைப்படக் கலைஞருக்குத் தெரிவித்ததை அடுத்து, அதனை அங்கு சென்று தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்திருந்தார். காசிரங்கா தேசிய பூங்காவின் (KNP) பிரதேச வன அதிகாரி (DFO) ரமேஷ் கோகோயின் கருத்துப்படி, குறிப்பிட்ட வெள்ளை மான் முதன்முறையாக இந்த பகுதியில் தற்போதுதான் காணப்பட்டது, மேலும் அது மற்ற பழுப்பு மான்களுடன் உணவு உண்ண அவ்வப்போது பூங்காவிற்கு வெளியே வருகிறது.


காசிரங்காவில் உள்ள 40,000 பன்றி மான்களில் இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு அரியவகை வெள்ளைப் பன்றி மான்களைக் காணலாம் என்று கோகோய் கூறியிருந்தார். காசிரங்கா தேசிய பூங்கா பல்வேறு வகையான வன விலங்குகளின் தாயகமாக உள்ளது. பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு மத்தியில், தேசியப் பூங்கா, அழிந்து வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருக இனங்களின் தாயகமாக உலகப் புகழ்பெற்றது, இது உலகில் வேறெங்கும் காணமுடியாத ஒரே ஒரு காண்டாமிருகமாகும்.