இந்தியாவின் முக்கியமான நகரமான மும்பையில் நடப்பு ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் வீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் இவ்வளவு பதிவு நடந்திருப்பது இந்த ஆண்டில்தான். கோவிட் காரணமாக வீடு பதிவு செய்வதில் மகாராஷ்டிர அரசு ஆரம்பத்தில் சில சலுகைகள் வழங்கின. ஆனால் இந்த சலுகைகள் முடிந்தபிறகும் கூட வீடு வாங்கும் ஆர்வம் குறைவில்லை. தவிர ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்தன. மேலும் வீட்டுக்கடனுக்கான வட்டியும் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்திருதன. இவை அனைத்தும் ஒன்றிணைந்ததால் வீடு வாங்கும் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
நடப்பு டிசம்பரின் மூன்று வாரத்தில் 5,553 பதிவுகள் நடந்திருக்கின்றன. கடந்த மாதத்தில் (நவம்பரில்) 7,582 பதிவுகள் நடந்ததாக பதிவுத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் பத்திர பதிவு வரியில் இருந்து சலுகை கொடுக்கப்பட்டதால் 2020-ம் ஆண்டு நவம்பரில் 9,300-க்கும் மேற்பட்ட பதிவுகள் நடந்தன. 2 சதவீதம் வரை ஸ்டாம்ப் வரி குறைக்கப்பட்டது. இந்த சலுகை நவம்பர் (2020) முதல் மார்ச் (2021) வரையிலான காலத்துக்கு வழங்கப்பட்டது. அதனால் வீடு வாங்குவதை மக்கள் விரும்பினார்கள்.
ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மும்பையில் வீட்டுபதிவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 122 சதவீதம் உயரந்திருக்கிறது. இந்த 11 மாத காலத்தில் 5351 கோடி அளவுக்கு மாநில அரசு வருமானம் ஈட்டி இருக்கிறது. மார்ச் மாதம் சலுகைகள் முடியும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் மார்ச் மாதம் மட்டும் 17,728 வீடுகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு 80,764 முன்பதிவுகள் மகாராஷ்டிராவில் நடந்தது. இதுதான் இதற்கு முந்தைய உச்சமாகும். இந்தியாவில் உள்ள முக்கியமான அனைத்து ரியல் எஸ்டேட் மும்பையில் செயல்பட்டு வருகின்றன. லோதா, கோத்ரெஜ், ஒபராய், ஹிராநந்தினி, கல்பதரு, டாடா, ஷபூர்ஜி பலோன்ஜி, பிரமல், மஹிந்திரா உள்ளிட்ட பல குழுமங்கள் மும்பையில் செயல்பட்டு வருகின்றன.
ஒரு கோடிக்கும் கீழ்
வீடு வாங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் விற்பனையான வீடுகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வீடுகளின் பங்கு 58 சதவீதமாகும். ஒரு கோடி ரூபாய் முதல் ரூ 5 கோடி வரையிலான வீடுகளின் பங்கு 36 சதவீதமாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வீடுகளின் பங்கு 5 சதவீதமாகவும் ரூ.10 கோடிக்கும் மேலான வீடுகளின் பங்கு 1 சதவீதமாகவும் இருக்கிறது. பல திரைபிரபலங்கள் தொழிலதிபர்கள் கடந்த ஓர் ஆண்டில் வீடு வாங்கினார்கள்.
தற்போது பதிவுக்கான சலுகைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் மொத்த விற்பனையில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வீடுகளின் பங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் பத்திர பதிவில் சலுகைகள் இருந்த காலத்தில் ஒரு கோடி ரூபாய் முதல் ரூ.5 கோடி வரையிலான வீடுகளின் விலையில் பெரும் ஏற்றம் இருந்தது. சில மாதங்களில் இந்த பிரிவில் 43 சதவீதம் வரை விற்பனையின் பங்கு இருந்தது. மும்பை மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வீடு வாங்கும்போக்கு உயர்ந்திருப்பதாக ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்ற்னர்.