ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வாரம் தலிபான்கள் கைப்பற்றினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களுக்கு பயந்து பலரும் நாட்டை விட்டு விமானம் மூலம் வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்ற சம்பவம் உலகம் முழுவதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சீனா தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்தது. தலிபான்களின் ஆட்சி குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை முறைப்படி அறிவிக்காத நிலையில், சமூக வலைதளங்களில் தலிபான்கள் நடவடிகைக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.  




இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். அவர்கள் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய முறைக்கும் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, அவர்களின் கருத்து நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாலும் அவர்களை அந்த மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.


அசாம் மாநிலத்தின் காம்ரூப், பார்பேடா, துப்ரி மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களில் இருந்து தலா இருவரும், தாரங், கசார், கைலாகண்டி, தெற்கு சல்மாரா, கோல்பாரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும், என மாநிலம் முழுவதும் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.






 


மேலும், தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்த மாநில துணை ஐ.ஜி. வயலட் பரவ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள அறிவிப்பில், “ சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் நபர்கள் மீது அசாம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மீது குற்றவழக்குகளை நாங்கள் பதிவு செய்வோம். உங்கள் கவனத்திற்கு அதுபோல ஏதேனும் அறிவிப்பு வந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.