முக்கியமான விவகாரங்களை பற்றி பேசாமல் தன்னை பற்றி முட்டாள்த்தனமான கருத்தை பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி தெரிவித்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.


தேர்தலில் வெற்றி பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என முன்னாள் எம்பியும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான ரமேஷ் பிதுரி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவர் இப்படி பேசி இருப்பதாக விமர்சனம் எழுந்தது.



பிரியங்கா காந்தியின் கன்னங்கள் குறித்து சர்ச்சை கருத்து:


பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர்கள் இப்படி பேசுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பற்றியும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குறித்தும் அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


சமீபத்தில் கூட, கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும் அதனால்தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட்டனர் என்றும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிதேஷ் ரானே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.


இந்த சர்ச்சையே அடங்காத நிலையில், பிரியங்கா காந்தி குறித்து டெல்லி கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பேசிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய ரமேஷ் பிதுரி, "வரவிருக்கும் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் எனது சட்டமன்றத் தொகுதியின் சாலைகளை அமைப்பேன்" என பேசினார்.


"அபத்தமான கருத்து"


இதற்கு பதிலடி அளித்துள்ள பிரியங்கா காந்தி, "இது ஒரு அபத்தமான கருத்து. தன்னுடைய கன்னங்களைப் பற்றி அவர் பேசுவது இல்லை. இதெல்லாம் தேவையற்றது. தேர்தல் நேரத்தில் டெல்லி மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச வேண்டும்" என்றார்.


இதற்கு முன்பு, கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பசுவதை நடப்பதால்தான் கேரளாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது என கூறி சர்ச்சையை கிளப்பினார் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா.


இதையும் படிக்க: FCI Recruitment 2025: தங்கமான வாய்ப்பு.! 33,566 காலிப் பணியிடங்கள்: இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு