டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் கீழ் உள்ள வணிகப் பிரிவான இந்தியா ஏஐ, நாட்டில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) ஏற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


நம்மை வியக்க வைப்பதில் விஞ்ஞான உலகம் எப்போதும் தயங்கியதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகளால் தினம், தினம் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகிறோம். நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத வேலைகளை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்து வருகிறது.



இந்தியாவுடன் கைகோர்க்கும் மைக்ரோசாப்ட்:


இந்த நிலையில், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்த மத்திய அரசின் இந்தியா ஏஐ நிறுவனத்துடன் இணைந்து மைக்ரோசாப்ட் செயல்பட உள்ளது.


இந்த கூட்டணி இந்தியா ஏஐ இயக்கத்தின் முக்கிய நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.



  • மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியா ஏஐ-  உடன் இணைந்து, மாணவர்கள், கல்வியாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள், அரசு அதிகாரிகள், பெண் தொழில்முனைவோர் உட்பட 5,00,000 பேர்களுக்கு  2026-ம் ஆண்டுக்குள் திறன் பயிற்சி அளிக்கும்.

  • இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கிராமப்புற செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை  ஊக்குவிப்பதற்கும், ஹேக்கத்தான்கள், செயற்கை நுண்ணறிவு சந்தை மூலம் 1,00,000 செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பாளர்கள், உருவாக்குபவர்களை இணைப்பதற்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தும்.

  • 10 மாநிலங்களில் உள்ள 20 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் / தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் செயற்கை நுண்ணறிவு உற்பத்தித்திறன் ஆய்வகங்களை அமைத்து, 20,000 கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், 200 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் 1,00,000 மாணவர்களுக்கு அடிப்படை செயற்கை நுண்ணறிவு படிப்புகளை மேம்படுத்தவும் உதவும்.


வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது. அனைத்து விதமான வேலைகளையும் செய்யும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது.


இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஏஐ தொழில் நுட்பத்தை ஒழுங்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதையும் படிக்க: Bharatpol: சிங்கம் ஸ்டைலில்.. இந்தியா அறிமுகம் செய்த பாரத்போல், இன்டர்போல்க்கே டஃப் - இனி தப்பவே முடியாது..