அஸ்ஸாம் - மேகாலயா எல்லை அருகே உள்ள மேற்கு ஜெயின்டியா மலை பகுதியில் முக்ரோஹ் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இன்று காலை 10:30 மணி முதல் மொபைல் இன்டர்நெட்/டேட்டா சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேகாலயா அரசின் உள்துறை துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் அஸ்ஸாமை சேர்ந்த ஒரு வனக் காவலர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா இன்று உறுதிப்படுத்தினார்.
"காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேகாலயா காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என முதலமைச்சர் சங்மா கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில், மேகாலயா அரசு வெளியிட்ட அறிக்கையில், "முக்ரோ, மேற்கு ஜெயின்டியா மலை, ஜோவாய் ஆகிய இடங்களில் பொது அமைதி மற்றும் அமைதியை சீர்குலைக்கும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளதாக மேகாலயா, ஷில்லாங்கின் போலீஸ் தலைமையகத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
மேற்கு ஜெயின்டியா மலை, கிழக்கு ஜெயின்டியா மலை, கிழக்கு காசி மலைகள், ரி-போய், கிழக்கு மேற்கு காசி மலை, மேற்கு காசி மலை மற்றும் தென்மேற்கு காசி மலை ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது.
மேகாலயா மாநிலத்தில் ஊடகங்களையும் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதில் இருந்து தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேகாலயா உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் டைங்டோஹ் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஜெயின்டியா மலை, கிழக்கு ஜெயின்டியா மலை, கிழக்கு காசி மலை, ரி-போய், கிழக்கு மேற்கு காசி மலை, மேற்கு காசி மலை மற்றும் தென்மேற்கு காசி மலை மாவட்டங்களில் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடக சேவைகள் நிறுத்தப்படுகிறது.
உத்தரவை மீறுபவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 188 மற்றும் இந்திய தந்தி சட்டம், 1885 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.