Assam: அஸ்ஸாமில் அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பலதார மணம்:
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளது. அதற்குகேற்ப ஒவ்வொரு மாநிலத்தில் திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் மற்ற மாநிலத்தை காட்டிலும் அஸ்ஸாம் மாநிலம் வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருமணம் முறைகள் வித்தியாசமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் திருமண வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிராக பல சட்டங்கள் வகுக்கப்பட்டாலும் இன்றவும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அஸ்ஸாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகளவில் நடைபெற்று வருகிறது. பலதார மணத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலமான மேகலாயா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் உள்ளன. இதனை தடுக்க, சட்டங்களையும் அரசு வகுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, பலதார மணத்தை தடை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அஸ்ஸாம் அரசு அமைத்திருக்கிறது. இதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு முன்னதாக, ஒரு புதிய உத்தரவை அஸ்ஸாம் அரசு வெளியிட்டிருக்கிறது.
2வது திருமணத்திற்கு அனுமதி கட்டாயம்:
அதன்படி, அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டால் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹிமந்த் பிஸ்வா, "சில மதங்கள் பலதார திருமணத்தை செய்து கொள்ள அங்கீகரிக்கலாம். இருந்தாலும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள எந்த மதங்கள் அனுமதித்தாலும், அதற்கு மாநில அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
அரசுப் பணியாளர் இறக்கும்போது, ஓய்வூதியத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோருகிறார்கள். இதற்கு தீர்வு காண்பது மிகவும் சிக்கலாக உள்ளது. இதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனைவியோ அல்லது கணவரோ உயிருடன் இருக்கும்போது, எந்த ஒரு அரசு ஊழியரும் அரசின் அனுமதியைப் பெறாமல் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அப்படி செய்துக் கொள்ள விரும்பினால், அரசின் அனுமதியை பெற வேண்டும். மேலும், முதல் மனைவி/கணவன் உயிருடன் இருக்கும்போது, 2வது திருமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.