நாடாளுமன்றத்தில் அதிரடியான கேள்விகளை எழுப்பி தேசிய அளவில் பிரபலம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  


தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில், விசாரணை நடத்தி வரும் மக்களவை நெறிமுறைகள் குழு, வரும் 31ஆம் தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேற்று சம்மன் அனுப்பியது.


மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பிய மக்களவை நெறிமுறைகள் குழு: 


இந்த நிலையில், தனது தொகுதியில் தனக்கு வேலை இருப்பதாகவும் அது நவம்பர் 4ஆம் தேதிதான் முடியும் என்பதால், அதற்கு பிறகுதான் ஆஜராக முடியும் என மொய்த்ரா தெரிவித்துள்ளார். தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தற்போது துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.


மேலும், தனக்கு அளிக்கப்பட்ட சம்மன், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார், தனக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்கமூலம் அனைத்தும் தனக்கு கிடைப்பதற்கு முன்பே ஊடகத்திற்கு அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். 


இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் மொய்த்ரா வெளியிட்ட பதிவில், "அக்டோபர் 31ஆம் தேதி, நான் ஆஜராக வேண்டும் என்பதை நெறிமுறைகள் குழுவின் தலைவர் நேரலை நிகழ்ச்சியில் டிவியில் அறிவிக்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மெயில் எனக்கு இரவு 7:20க்குதான் அனுப்பப்படுகிறது.


பகீர் கிளப்பிய குற்றச்சாட்டு:


எனக்கு எதிரான அனைத்து புகார்களும் வாக்குமூலங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. எனது தொகுதியில் நிகழ்ச்சிகள் இருப்பதால் நவம்பர் 4 ஆம் தேதி அது முடிவடைந்தவுடன் உடனடியாக ஆஜராவேன்" என குறிப்பிட்டுள்ளார்.


நேற்று நடந்த மக்களவை நெறிமுறைகள் குழு கூட்டத்தில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராயும் கலந்து கொண்டு வாக்குமூலம் அளித்தனர். லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபதான் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.


இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபவிடம் அளித்தவர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய். இவர் வேறு யாரும் அல்ல, மொய்த்ராவின் முன்னாள் காதலர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரா இவர், மொய்த்ராவுக்கு எதிராக சிபியிடம் புகார் அளித்துள்ளார்.


இந்த சர்ச்சை வெடித்ததில் இருந்தே, திரிணாமுல் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் அமைதி காத்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரும் மேற்குவங்க பொதுச் செயலாளருமான குணால் கோஷி, இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.