கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா சர்மா தெரிவித்துள்ளார்.


மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா சர்மா கூறுகையில், “அஸ்ஸாமில், எந்த உணவகத்திலும், ஹோட்டலிலும் மாட்டிறைச்சி வழங்கப்பட மாட்டாது என்றும், எந்த பொது விழா அல்லது பொது இடங்களிலும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என்றும் முடிவு செய்துள்ளோம். எனவே இன்று முதல் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மாட்டிறைச்சி உண்பதை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளோம். பொது இடங்களிலும் இனி மாட்டிறைச்சி வழங்கக்கூடாது. 



முன்னதாக கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் முடிவாக இருந்த்து. ஆனால் இப்போது அதை நீங்கள் எந்த பொது இடத்திலும், ஹோட்டலிலும் அல்லது உணவகத்திலும் சாப்பிட முடியாது என்பதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளோம்.


தற்போதுள்ள அஸ்ஸாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021 இன் படி, இந்து, ஜெயின், சீக்கியர்கள் மற்றும் பிற மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் அதிகமாக வசிக்கும் அல்லது 5 கிமீ சுற்றளவு உள்ள பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.



இதனிடையே மாட்டிறைச்சி தடைக்கு மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அசாம் அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா, 'மாட்டிறைச்சி வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறுங்கள்' என்று தெரிவித்துள்ளார். 


"மாட்டிறைச்சி தடையை வரவேற்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுக்கு சென்று குடியேறுமாறு அசாம் காங்கிரஸுக்கு நான் சவால் விடுகிறேன்" என்று பிஜுஷ் ஹசாரிகா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.