கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்:


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்தது.


இந்த நிலையில், பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜகவுக்கு தேர்தல் வியூகம் அமைத்து தருபவர்களில் முக்கியமானவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு குறித்து பேசியிருந்தார்.


அம்பேத்கர் சொன்னது என்ன?


செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, "மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்னமும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்புகிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியிருந்தார். இதுதான் நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை. இன்று காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று சொல்கிறது" என்றார்.


ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது குறித்து பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு (PFI) ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. சித்தராமையா அரசு அவர்களின் ஆட்சிக் காலத்தில் PFI மீதான வழக்குகளை திரும்பப் பெற்றது. 


எனவே, அவர்கள் (காங்கிரஸ்) முஸ்லிம்களை திருப்திப்படுத்த PFI மற்றும் பஜ்ரங்தளத்தை தடை செய்ய சொல்கிறார்கள். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை PFI மற்றும் சில அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளின் தேர்தல் அறிக்கை போல் தெரிகிறது" என்றார்.


பாஜக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், "பொது சிவில் சட்டம் (யுசிசி) அமலாக்கம் தென் மாநில இஸ்லாமிய பெண்களுக்கு பாலின நீதி மற்றும் சம உரிமைகளை உறுதி செய்யும். கர்நாடக பிஜேபி மிகவும் தைரியமான உறுதிப்பாட்டை எடுத்துள்ளது. மேலும், நாடு முழுவதும் UCC-ஐ அமல்படுத்துவதற்கு நாடு தழுவிய அளவில் இந்த கோரிக்கையை எழுப்புவோம். நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது காலத்தின் தேவை" என்றார்.


பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருப்பது கவனிக்கத்தக்கது. பாஜக, தனது தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.