இலங்கைக்கு அனுமன் தீ வைத்தது போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு தீ வைப்போம் என அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இஸ்லாமியர்கள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் தொடங்கி பாஜகவினர் பலரும் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.


அப்பட்டமான வெறுப்பு பேச்சு:


மத உணர்வுகளை தூண்டும் விதமாக ஏற்கனவே, பலமுறை கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, மீண்டும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக பேசியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதியும் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.


இந்த நிலையில், ஜார்க்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று பேசிய கருத்துகள் பெரும் பரபரப்பை கிளப்பின. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு தீ வைப்போம் என அவர் கூறி இருக்கிறார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நான் தீ மூட்டுகிறேன். அனுமனும் இலங்கையில் தீ வைத்தார். ஊடுருவல்காரர்களுக்கு எதிராக தீ மூட்டி ஜார்கண்ட் மாநிலத்தை பொன் பூமியாக மாற்ற வேண்டும்.


அஸ்ஸாம் முதல்வர் என்ன பேசினார்?


சந்தால் பர்கானாவில் பழங்குடியின மக்கள் தொகை குறைந்து முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் ஊடுருவல் செய்பவர்கள் அல்ல. ஆனால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் முஸ்லிம்களின் மக்கள் தொகை எவ்வாறு அதிகரித்து வருகிறது?


ஒரு குடும்பம் 10-12 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறதா? குடும்பங்கள் இவ்வளவு குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை என்றால், நிச்சயமாக மக்கள் வெளியில் இருந்து வருகிறார்கள். இது எளிய கணிதம். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம். ஆனால், அது முக்கிய முன்னுரிமை அல்ல. சந்தால் பரகானாவில் இருந்து ஊடுருவும் நபர்களை வெளியேற்றுவதும் பெண்களுக்கு நீதி வழங்குவதே ஆகும்" என்றார்.


இதற்கு முன்னதாக, வகுப்புவாதத்தில் ஒரே மதத்தினர்தான் ஈடுபடுகின்றனர் என்று் இந்துக்கள் ஈடுபடுவதில்லை என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருந்தார். ராகுல் காந்தியை நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி என்றும் அவர் இந்தியரே இல்லை என்றும் மத்திய அமைச்சரும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்திருந்தார்.