அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று அந்த மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அசாம் தலைநகரான கவுகாத்தியில் இணையதளம் மூலமாக மது விற்பதற்கு அனுமதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முயற்சியாக ஒரு மாதத்திற்கு அசாமில் ஆன்லைன் மது விற்பனை அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக கூறிய அந்த மாநில அமைச்சர் பிஜூஸ் ஹசாரிகா, பரிசோதனை முயற்சியில் கொண்டு வரப்படும் இந்த முயற்சி வெற்றியடைந்தால், அசாம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.




கடந்த ஆண்டு மேற்கு வங்காளம் மாநிலத்தில் இணையதளத்தில் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, மேற்குவங்காளத்தில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இணையதளம் மூலமாக பதிவு செய்தால் அவர்களின் இருப்பிடத்திற்கே மது விநியோகிக்கப்படும். மேற்கு வங்காள அரசின் நடைமுறையைப் பின்பற்றி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் இணையதளம் மூலமான மது விற்பனையை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, அந்த மாநிலத்தில் மொபைல் செயலி மூலமாக அல்லது இணையதளம் மூலமாக மது விற்கப்பட்டு வருகிறது.






மேலும் , இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இதர முக்கிய முடிவுகளையும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அசாம் முதல்வரின் அந்த பதிவில், குளிர்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல், குளம் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.




மேலும், மாநிலத்தில் உள்ள கோலாகட் மற்றும் சருபாதர் மாநிலத்திலே வருவாய் குறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் ஜோகன் மோகன் மற்றும் அமைச்சர் அசோக் சிங்கல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், முதல்வர் ஹிமாந்த பிஸ்வால் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் பேரழிவு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிவாரணம் வழங்கவும், அடிமட்டத்தில் கல்வியை மேம்படுத்தவும், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.