இந்தி திணிப்பு விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இனிமையான மொழி தமிழ் மொழி என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டியுள்ளார். வட இந்தியாவில் தமிழ் மொழி என்றாலே மசாலா தோசை என்று தான் அழைப்பார்கள் என்றும் ருசிகரமாக பேசியுள்ளார்.

"மிக மிக இனிமையான மொழி தமிழ்"

ஸ்ரீபெரும்புதூரில் ஜெட்வெர்க் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "கான்பூர் ஐஐடியில் படித்து கொண்டிருந்தபோது, சடகோபன் என்ற பேராசிரியர்தான் தமிழ் மொழியை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்" என்றார்.

வணக்கம் என தமிழ் மொழியில் பேசி உரையை தொடங்கிய அவர், "தமிழ் மிகவும் இனிமையான மொழி. தமிழில் எனக்குத் தெரிந்தது மூன்று வார்த்தைகள்தான். வணக்கம், எப்படி இருக்கீங்க, நன்றி ஆகிய வார்த்தைகள் மட்டுமே தமிழில் தெரியும்.

சடகோபன் என்ற பேராசிரியர், எனக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்தினார். வட இந்தியாவில் தமிழ் பொதுவாக மசாலா தோசை என்று அழைக்கப்படுகிறது. இல்லையா?. அவர் எனக்கு தமிழ் கலாச்சாரத்தின் பல அம்சங்களைக் கற்றுக் கொடுத்தார்.

தமிழில் பேசி கலக்கிய மத்திய அமைச்சர்:

மிக, மிக ஆழமான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. மிகவும் பழமையான கலாச்சாரம். நாம் அனைவரும் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறோம். நாம் அனைவரும் தமிழ் மொழியை மதிக்கிறோம். இது, நமது நாட்டின் சொத்துக்களில் ஒன்றாகும்.

இது, உலகின் சொத்துக்களில் ஒன்றாகும். அதில் பெருமை கொள்வோம். அதில் மகிழ்ச்சி அடைவோம். அனைத்து இந்திய மொழிகளையும் பேசி அனுபவிப்போம். அந்த உணர்வோடுதான் நமது பிரதமர் (மோடி) இன்று செயல்பட்டு வருகிறார்.

 

ஒவ்வொரு இந்திய மொழியும் அதற்கான இடத்தைப் பெறுவதையும், அவற்றுக்கு உரிய மரியாதையைப் பெறுவதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். அவை எல்லா இடங்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யுங்கள்" என்றார்.