குஜராத்தில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர், தான் பாங்கு குடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். வதோதராவில் காரை வேகமாக ஓட்டி சென்று, வாகனங்கள் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்தியதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரில் இருந்த ஏர்பேக்கே காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். ஏர்பேக் ஆக்டிவேட் ஆனதால் சாலையில் செல்வதை தன்னால் பார்க்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.


பதைபதைக்க வைக்கும் விபத்து:


குஜராத் மாநிலம் வதோதராவில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், காரை அதிவேகமாக இயற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்து, இரு சக்கர வாகனம் மீது அந்த கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலர் காயம் அடைந்தனர்.


விபத்தை ஏற்படுத்திவிட்டு, சிறிய குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் காரில் இருந்து வெளியே வந்த நபர், 'ஓம் நமசிவாய' என்றும் 'நெக்ஸ்ட் ரவுண்ட்' என்றும் சாலையில் கத்தினார். வெளியே வந்த நபர் செய்த செயல்தான் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். பின்னர்தான் தெரிய வந்தது அவர் சட்டக்கல்லூரி மாணவர் என்று. அவரின் பெயர் ரக்சித் சௌராசியா. காவல்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் ஒரு ஸ்கூட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தோம்.


இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்:


வலதுபுறம் திரும்பினோம். சாலையில் ஒரு பள்ளம் இருந்தது. வலதுபுற திருப்பத்தில் ஒரு ஸ்கூட்டியும் ஒரு காரும் நின்றிருந்தன. எங்கள் கார் ஸ்கூட்டரைத் தொட்ட உடனே ஏர்பேக்குகள் திறந்தன. அதன் பிறகு கார் எங்கு சென்றது என்று எனக்குப் புரியவில்லை. விபத்து நடந்த நேரத்தில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில்தான் கார் சென்று கொண்டிருந்தது" என்றார்.


எந்த போதைப் பொருளையும் உட்கொள்ளவில்லை என முதலில் கூறினாலும் பின்னர் பாங் (கஞ்சா) உட்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார். "ஒரு பெண் இறந்துவிட்டதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் எனக்குச் சொல்லப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விரும்புகிறேன். அது என் தவறு, அவர்கள் விரும்புவது நடக்க வேண்டும்" என்றும் விபத்தை ஏற்படுத்திய ரக்சித் தெரிவித்துள்ளார்.