உலக பொருளாதாரம், சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தோனேசியாவிடம் இருந்த அதன் தலைமை பொறுப்பை இந்தியா, கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஏற்று கொண்டது. 


ஜி-20 அமைப்புக்கு தலைமை வகித்து வரும் இந்தியா:


ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி-20 அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜி-20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னுரிமைகளை விளக்கி பேசினார்.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அளவிடுதல் ஆகியவற்றை டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுவின் முன்னுரிமைகளாக இந்தியா தேர்வு செய்ததாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய முன்னுரிமைகள்:


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இவை மூன்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன. பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் சமமான டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கான பரந்த உலகளாவிய திட்டத்துடன் இந்த முன்னுரிமைகள் ஒத்துப்போகின்றன. தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலில் பிரதமர் மோடி நம்பிக்கை கொண்டுள்ளார்" என்றார்.


புதுமையான கண்டுபிடிப்புகளின் மையமாக பெங்களூரு திகழ்வதாக புகழ்ந்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை வரையறுக்கும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க நாங்கள் கூடியுள்ளோம். உலகின் மிக புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வரும் நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு உள்ளது" என்றார்.


"யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற பண்பே இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உந்துசக்தி"


முன்னதாக, காணொளி காட்சி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்திற்காக 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டமே காரணம்.


புதுமையின் மீதான இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை, விரைவாக செயல்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் இயக்கப்படுகிறது. அதே சமயம், அனைவரையும் உள்ளடக்க வேண்டும். யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற பண்பே இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உந்துசக்தியாக உள்ளது.


இந்தியாவில் உள்ள 850 மில்லியன் இணைய பயனர்கள், உலகிலேயே குறைவான விலையில் இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் மற்றும் மொபைல் ஆகியவை அனைத்து மக்களையும் நிதி அமைப்புக்குள் கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.  UPI மூலம் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது" என்றார்.