நாட்டின் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றுள்ளார். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட உள்ளனர். 


ஏகே பாணியில் பட்டையை கிளப்பிய ராகுல் காந்தி:


இந்த நிலையில், KTM 390 Adventure பேக்கில் லடாக்கிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியுடன் சென்றவர்களும், அதே பைக்கில் அவரை போன்றே உடை அணிந்து ராகுல் காந்தியை பின்தொடர்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


ஹெல்மெட், கிளவுஸ், ரைடிங் பூட்ஸ், ஜாக்கெட் என பைக் ரைடர்கள் அணியும் அசத்தலான உடை அணிந்து, லடாக்கின் அழகிய மலைகள் வழியாக ராகுல் காந்தி பயணிப்பது போன்ற புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்களை பதிவிட்ட ராகுல் காந்தி, "பாங்காங் ஏரி, உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று என எனது தந்தை கூறியிருக்கிறார். அங்குதான் சென்று கொண்டிருக்கிறேன்" என கேப்சனில் பதிவிட்டுள்ளார்.


லடாக்கிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அங்கு இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) பக்கத்தில், லடாக்கில் எடுத்த ராகுல் காந்தி எடுத்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், "மேல்நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். தடுக்க முடியாது" என பதிவிடப்பட்டுள்ளது.


லடாக்கிற்கு பைக் ட்ரீப் சென்ற ராகுல் காந்தி:


KTM 390 Adventure பைக் என்பது 373 cc பைக் ஆகும். இது, அதிகபட்சமாக 32 kW பவரையும், 37 Nm உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 155 கி.மீ வேகத்தில் இந்த பைக்கை ஓட்டலாம்.


முன்னதாக, நேர்காணல் ஒன்றில், இந்த பைக்கை பற்றி குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தி, "KTM 390 பைக்கை சொந்தமாக வைத்திருக்கிறேன். ஆனால், எனது பாதுகாப்பு அதிகாரிகள் அதை ஓட்ட அனுமதிக்கவில்லை" என பேசிருந்தார்.


டெல்லியின் கரோல் பாக் மார்க்கெட்டில்  பைக் மெக்கானிக்குகளுடன் மேற்கொண்ட உரையாடலின் வீடியோவை சமீபத்தில் ராகுல் காந்தி பகிர்ந்திருந்தார். பைக்கை எப்படி சர்வீஸ் செய்வது போன்ற நுணுக்கங்களை அவர் அங்கு கற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை, தனது யூடியூப் சேனலில் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.


 


காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  






எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், இயற்பியலாளரும் முன்னாள் ஐஐடி டெல்லி பேராசிரியருமான விபின் குமார் திரிபாதி, எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.