அகில இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) ஹைதராபாத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹைதராபாத்தில் நின்று போட்டியிட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, அந்த பேரணியில் காங்கிரஸை கடுமையாக சாடிய ஒவைசி, காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 


ராகுல் காந்திக்கு சவால் விடுத்த அசாதுதீன் ஒவைசி: 


அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹா முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது, “ உங்கள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வயநாட்டில் போட்டியிடாமல், ஹைதராபாத்தில் போட்டியிடுமாறு நான் சவால் விடுகிறேன். களத்தில் வந்து எனக்கு எதிராக மோதுங்கள். காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து பெரிய அறிக்கைகள் விடப்படும், நிறைய பேசுவார்கள். ஆனால், எதுவும் நடக்காது. என்ன நடந்தாலும் நான் மோத தயார். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் மசூதியும், தலைமைச் செயலக மசூதியும் இடிக்கப்பட்டது”என்று தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், “ காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் லாலு யாதவின் கட்சி (ஆர்ஜேடி) தலைவர்கள் முஸ்லிம்களின் பெயரை நாடாளுமன்றத்தில் கூற பயப்படுகிறார்கள்" என்றார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து ஒவைசி கூறுகையில், ”முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் நின்று கூறினேன். ஆனால் நான் பெண்களுக்கு எதிரானவன் என்று சொல்கிறார்கள், ஆனால் நீங்கள் பெண்களுக்கும், ஓபிசிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானவர் என்பதுதான் உண்மை.” என்றார். 


தொடர்ந்து, பாரதிய ஜனதா எம்பி ரமேஷ் பிதுரி முஸ்லீம் எம்பி ஒருவர் குறித்து பேசியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய ஒவைசி, “நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்” என்று கேள்வியும் எழுப்பினார். 






முன்னதாக, தெலுங்கானாவில் பாரதிய ஜனதா, பாரத ராஷ்டிர சமிதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், இந்த மூவருக்கு எதிராக தனது கட்சி போராடுவதாகவும் இந்த மாத தொடக்கத்தில் தெலுங்கானா மாநிலம் துக்குகுடாவில் நடந்த விஜயபேரி கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார். அப்போது பேசிய அவர், “தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ்-க்கு எதிராக போராடவில்லை, பிஆர்எஸ், பாஜக, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போராடுகிறது.அவர்கள் தங்களை வெவ்வேறு கட்சிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அல்லது ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது சிபிஐ-இடி வழக்குகள் எதுவும் இல்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை "தனது மக்கள்" என்று கருதுகிறார்” என்றார். 


ராகுல்காந்தி கடந்த வாரம் இப்படி பேசியதற்கு பிறகே, காங்கிரஸுக்கும், ஏஐஎம்ஐஎம்க்கு முட்டல் மோதல் தொடங்கியது. தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸும் ஏஐஎம்ஐஎம்யும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இரு கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.