ஆண்டுதோறும் திருமலை திருப்பதி கோயிலில் பல உற்சவங்கள் நடைபெரும். அதில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் தான். குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் வெங்கடாஜலபதி பிறந்தநாள் அனுசரிக்கப்படுவதால் அந்த மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையான் பிரம்மதேவருக்கு தனக்கு உற்சவம் நடத்த சொல்லிக் கேட்டார். அப்படி பிரம்மதேவர் நடத்தும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.


திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மொற்சவம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினசரியும் காலையும் மாலையும் மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலிப்பார். பிரம்மோற்சவ வீதி உலாவின் போது வாகனங்களுக்கு சற்று முன்பாக பிரம்ம ரதம் என்று சிறிய தேர் இழுத்துச் செல்லப்படும். பிரம்மா இந்த தேரில் அமர்ந்து, பெருமாள் வீதியுலா வரும் மாடவீதிகளை சோதித்துப் பார்ப்பதாக ஐதீகம். அதன் பிறகே பெருமாள் இருக்கும் வாகனம் வீதியுலா செல்லும். இந்த வழக்கம் திருப்பதியில் மட்டுமே உள்ளது. மற்ற கோயில்களில் சீவேலி என்ற சிரிய பல்லக்கில் சக்கரத்தாழ்வார் விற்றிருப்பார் அந்த வாகனம் தான் பெருமாள் அவதார வாகனத்திற்கு முன் செல்லும்.


 மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பெருமாளுக்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செபடம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இவ்விரு விழாக்களின் போதும் வாகன புறப்பாடு அந்தந்த நாட்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருக்கொடியேற்றம், திருக்கொடியிறக்கம், மரத்தாலான பெரிய தேரோட்டம் ஆகியவை நடைபெறாது. எனினும் இவ்விழாவும் ஒன்பது நாட்களே நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் 5 வது நாள் கருட வாகனம் நடைபெறும். இந்த கருட வாகனத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வார்கள்.   


பிரம்மோற்சவ விழா 18 ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆறாவது நாள் விழா கோலகலமாக நடைபெற்றது. நேற்று திருப்பதி திருமலை கோயிலில் ஸ்ரீதேவி பூதேசி சமேத ஏழுமையான் தங்கத்தேரில் நான்கு மாட வீதியிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பெண்கள் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250 கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று ஒரு நாள் மட்டும் திருப்பதியில் 74,884 பேர் தரிசனம் செய்தனர். 32,213 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் ரூ 2.70 கோடி காணிக்கை வசூலானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் இன்று  வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1 முதல் 20 வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். பக்தர்கள் தங்களின் பயணத்திட்டத்திற்கு ஏற்ப டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.