கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாகக் கூறி, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஷாருக்கானின் மகனை கைது செய்தவர் அந்த சமயத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குநராக பதவி வகித்த சமீர் வான்கடே.
மிரட்டப்பட்ட ஷாருக்கான் குடும்பம்:
இதையடுத்து, ஷாருக்கானின் மகன், 22 நாள்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, போதை தடுப்பு பிரிவி அவரை குற்றத்தில் இருந்து விடுவித்தது. இந்த வழக்கை திசை திருப்பி ஷாருக்கானின் மகனை சிக்க வைத்து லஞ்சம் கேட்டதாக சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வான்கடே மற்றும் அவரது குழுவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க தொடங்கியது. அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
அதன்படி, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் 25 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் போதைப்பொருள் வழக்கில் அவரை சிக்க வைப்போம் என அவரது குடும்பத்தினருக்கு சமீர் வான்கடே மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய அறிக்கை:
இந்நிலையில், இந்த வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்துடன் சமீர் வான்கடே, பல முறை வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் ஆகியோரின் பெயர்கள் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டு மேலும் சில சந்தேக நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சொகுசு கப்பலில் சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்குரிய ஒருவரிடமிருந்து சிகரெட்டை ரோல் செய்ய பயன்படுத்தப்பட்ட பேப்பர் மீட்கப்பட்டது.
இருந்த போதிலும், அவரை கைது செய்யவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யான் கானை காவலில் வைத்திருந்தபோது, அவரின் பாதுகாப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
2017 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் சமீர் வான்கடே தனது குடும்பத்துடன் ஆறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். இங்கிலாந்து, அயர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு சென்ற சமீர் வான்கடே 55 நாட்கள் தங்கியிருந்தது அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால், இதற்காக தான் 8.75 லட்சத்தை மட்டுமே செலவிட்டதாக சமீர் வான்கடே கூறியுள்ளார். பல விலையுயர்ந்த வாட்சுகளையும் சொத்துகளையும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.