இந்தியாவில் போதை பொருட்கள், தங்கம், வைரம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை சட்ட விரோதமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் கடத்தி வரும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதைத்தடுப்பதற்காக கடல் மார்க்கத்திலும், விமான நிலையங்களிலும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் அரேபிய கடலோரத்தில் அமைந்துள்ளது ஜகாவ். ஜகாவ் அருகே உள்ள கடல்பகுதி இந்தியா – பாகிஸ்தான் கடல் பாதை ஆகும். இதனால், இந்த பகுதியில் இந்திய கடலோர படையினரும், தீவிரவாத தடுப்பு குழுவும் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், இந்த பகுதியில் நேற்றிரவு சர்வதேச கடல் எல்லையில் இந்தியா நீர்நிலைக்கு உட்பட்ட பகுதியில் ஜகாவ்வில் இருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, இந்த படகை பார்த்த கடலோர காவல்படையினருக்கும், கடலோர காவல்படையினருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அல் சாகர் என்று பெயரிடப்பட்ட அந்த படகை சுற்றி வளைத்தனர். பின்னர், அந்த படகின் உள்ளே சென்று சோதனை செய்தனர். சோதனையில் அந்த படகு பாகிஸ்தான் படகு என்பதை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
படகை சோதனை செய்தபோது படகில் ஹெராயின் இருப்பதை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, படகில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர். மேலும், பாகிஸ்தான் படகையும் பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர் விசாரணைக்காக படகை ஜகாவிற்கு கொண்டு வந்தனர். படகில் மொத்தம் 50 கிலோ ஹெராயின் இருந்துள்ளது. அவற்றின் சந்தை மதிப்பு ரூபாய் 350 கோடி ஆகும்.
கடந்த ஓராண்டில் மட்டும் கடலோர காவல்படையும் தீவிரவாத தடுப்பு குழுவும் இணைந்து வெற்றிகரமாக நடத்திய 6வது ஆபரேஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான் படகு ஒன்று 40 கிலோ கிராம் ஹெராயினுடன் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : திப்பு சுல்தான் எதிர்ப்பு அரசியல்... பாஜக எம்பி வைத்த கோரிக்கை... மாற்றம் கண்ட ரயிலின் பெயர்
மேலும் படிக்க : Jammu Kashmir Tourist: 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்! ஸ்தம்பிக்கும் ஜம்மு காஷ்மீர்