ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை அனுசரிக்க வேண்டும் என முதன்முதலில் முன்மொழிந்தது கனடாதான்.


அதன் தொடர்ச்சியாக, 2011ஆம் ஆண்டு, டிசம்பர் 19ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, அக்டோபர் 11, 2012 முதல் பெண் குழந்தைகளின் தினமாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்ற வாக்களித்தது. அதன் பின்னர் இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகாரம் பெற்றுள்ள சர்வதேச பெண் குழந்தைகள் தினம், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் பயன்படுகிறது. பெண்களை சமமாக கருதும் சமூகத்தை உருவாக்க இந்த நாள் ஒரு வாய்ப்பை தருகிறது. 


கல்வி, ஊட்டச்சத்து, அடிப்படை  உரிமைகள், மருத்துவப் பாதுகாப்பு, பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கட்டாய குழந்தைத் திருமணம் போன்றவற்றில் இருந்து பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் இன்றும் நம் சமூகத்தில் உள்ளன.


நம் சமூகத்தில் நீண்ட காலமாக பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாகுபாட்டுக்கு ஆளாகியிருப்பதை நம் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. சிறந்த வாழ்க்கை முறையை வழங்குவது அல்லது கல்வி போன்ற சேவைகளை வழங்குவது போன்றவற்றில் பெண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது ஆண் குழந்தைக்கு எப்போதும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த மனநிலை நீண்ட காலமாக நம் உலகில் பெண்ணின் வளர்ச்சியைத் தடுக்கிறது.


ஆனால், கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள பல தாக்கங்களை உருவாக்கியுள்ளன. இருப்பினும் இன்னும் உலகின் சில பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. இச்சூழலில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள் பற்றி கீழே காண்போம்.


ஜூலியட் மார்டினெஸ்


பெண்கள் மற்றும் சிறுமிகளை நேரடியாகப் பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகார வரம்பிலிருந்து பெண்களை தள்ளி வைப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் 17 வயதான ஜூலியட்டா மார்டினெஸ்.


தனது சகாக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மாற்றம் வர வேண்டும் என்பதை உணர்ந்து, தி ட்ரெமெண்டாஸ் என்ற கூட்டு அமைப்பை நிறுவி உள்ளார். சிலி நாட்டை சேர்ந்த காலநிலை மற்றும் பாலின சமத்துவ ஆர்வலரான ஜூலியட்டா மார்டினெஸ், இளைஞர்கள் மத்தியில் பணியாற்றி சமூக மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார்.


திரிஷா ஷெட்டி


மறைந்த இங்கிலாந்து ராணி, முன்னாள் அமெரிக்க அதிபரின் பாராட்டுகளை பெற்ற மனித உரிமைகள் வழக்கறிஞரும் பாலின சமத்துவ ஆர்வலருமான த்ரிஷா ஷெட்டி, பெண்களுக்கு எதிராக தொடுக்கப்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொட்டு வருகிறார். இவரால் தொடங்கப்பட்ட
SheSays என்ற அரசு சாரா அமைப்பு இது தொடர்பாக இயங்கி வருகிறது.


கிருபா முனுசாமி


நாட்டில் தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி. மரண தண்டனை, கையால் மலம் அள்ளும் ஆபத்தான நடைமுறை மற்றும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.


மலாலா யூசுப்சாய் 


இளம் பெண்களின் கல்வி உரிமைக்காக தலிபான்களிடம் தலையில் குண்டு அடி வாங்கியவர் மலாலா யூசுப்சாய். அந்த தாக்குதில் இருந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பித்து, இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். உலகெங்கிலும் பெண் கல்விக்கு உதவிடும் வகையில் மலாலா ஃபண்ட் என்ற அரசு சாரா அமைப்பு நிறுவியுள்ளார்.


ஜகோம்பா ஜபி


காம்பியா நாட்டை சேர்ந்த சிறுமி ஜகோம்பா ஜபி. விண்வெளிப் பொறியியலாளராக விரும்பிய இவர், பெண் கல்வி உரிமைக்காக, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் அவர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களை தாங்கள் விரும்பும் துறைகளைத் தேர்வுசெய்யும் அதிகாரத்தை அளிக்க ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.