டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை கைது :
மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு சுமார் 9.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நீண்ட காலமாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் மார்ச் 21 ஆம் தேதி இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரிமனுத்தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இதையடுத்து கெஜ்ரிவால் இரவு கைது செய்யப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணியுடன் போட்டியிட உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் கைது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு நாட்டில் உள்ள தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
image credits: @ANI
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கையில் பயம் கொண்ட சர்வாதிகாரி இறந்த ஜனநாயகத்தை உருவாக்க .நினைக்கிறார். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவது மட்டுமன்றி தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களையும் கைது செய்வது சாதாரண விசயமாகி விட்டது. இதற்கு இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில் ”தேர்தல் தோல்வியின் பயத்தின் காரணமாக, டெல்லி முதலமைச்சரை பாஜக அரசு கைது செய்துள்ளது. நீதிக்கு புறம்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் சகோதரருமான ஹேமந்த் கைது தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்திருப்பது மூலம் பாசிச பாஜக அரசு வெறுப்பின் ஆழத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை, ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ கைதோ எதிர்கொள்ளவில்லை.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது தொடர்கிறது.
இந்த கொடுங்கோன்மை ஆட்சியானது மக்களின் கோபத்தை மேலும் தூண்டுகிறது. பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. இவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை எரியூட்டுகிறது, இந்திய கூட்டணியின் வெற்றி பயணத்தை பலப்படுத்துகிறது” என தெரிவித்தார்
பீகார் முன்னாள் முதலமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவிக்கயில் “தோல்வி பயத்தால் இது போன்ற கைது நடவடிக்கையின் மூலம் மோடி அரசு ஜனநாயகத்தை குலைத்து வருகிறது. இது போன்ற செயல்கள் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி சந்தீப் பதக் தெரிவிக்கையில் ”பாஜகவுக்கு தைரியம் இருந்தால், தேர்தல் களத்தில் எங்களை எதிர்கொள்ள வேண்டும். ஏன் இப்படி போலி வழக்குகளை போட்டு கோழைகளாக தாக்குகிறீர்கள்?. புதிய அரசியலை கொண்டு வர விரும்பும் ஒவ்வொரு குடும்பத்திலும் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இது ஆம் ஆத்மியின் போராட்டம், இந்த நாட்டிற்கு நேர்மையான அரசியலைக் கொடுக்க விரும்பும் ஒவ்வொருவரின் போராட்டம் இது." வெள்ளி கிழமை காலை பாஜகவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
“முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதானது, ஜனநாயக அமைப்புக்கு எதிரானது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
சரத் பவார்:
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் இதுகுறித்து கூறுகையில், கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது பாஜக எந்த அளவுக்கு ஆட்சிக்கு வரும் என்பதை காட்டுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த அரசியல் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி ஒன்றுபட்டுள்ளது.
அதே நேரத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், கெஜ்ரிவாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, எதிர்க்கட்சிகளின் தொடர் துன்புறுத்தலின் ஒரு பகுதி என்றும் கூறினார்.
அமித் பலேகர்:
ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவு தலைவர் அமித் பலேகர் கூறுகையில், ”வரும் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தில் இருந்து கெஜ்ரிவாலை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார்.