Arnold Dix uttarkashi: உத்தரகாசி சுரங்க விபத்து மீட்பு பணியில் முக்கிய பங்காற்றிய அர்னால்ட் டிக்ஸிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.


உத்தரகாசி சுரங்க விபத்து:


உத்தரகாண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 17 நாட்கள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் பத்திரமாக மிட்கப்பட்டனர். இந்த மீட்பு பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த அனைவருமே அர்னால்ட் டிக்ஸ் என்ற ஒரு பெயரை நிச்சயம் கேள்விபட்டிருப்பீர்கள். அவருக்கு தான் சமூக வலைதளங்களில் தற்போது பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் இந்தியாவிற்கு நல்ல சேதி வழங்கிய ஒரே ஆஸ்திரேலியர் என்றும் பாராட்டி வருகின்றனர்.


உத்தரகாசி மீட்பில் அர்னால்டின் பங்களிப்பு:


சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இடிபாடுகளை உடைக்க போராடிய மீட்புப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக, நவம்பர் 20ம் தேதி அர்னால்ட் டிக்ஸ்  சில்கயராவிற்கு அழைத்து வரப்பட்டார். மீட்பு பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியதோடு, எந்தெந்த முறைகளில் மீட்பு பணிகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பான கருத்துகளையும் முன்வைத்து விவாத்தித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதுதொடர்பாக நேற்று பேசிய அர்னால்ட், "முன்னெப்போதும் இல்லாத வகையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். விரைவில் வெளியே வருவார்கள்" என்றார். மேலும், “எனக்கு, இது ஒரு பழங்காலக் கதை போன்று உள்ளது. இந்த மலை தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. அந்த 41 பேரையும் ஒரு தாயைப் போல கண்காணித்து, அவர்களுக்குத் எந்த தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அந்த மக்கள் எப்போது, ​​எந்த வாசலில் இருந்து வெளியே வருவார்கள் என்பதை மலையின் விருப்பம்தான் தீர்மானிக்கும்” எனவும் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்தார். அதேநேரம், தொழிலார்கள் அனைவரும் பத்திரமாக மிட்கப்பட வேண்டும் என, அவர் சில்க்யாரா பகுதியில் இருந்த கோயிலிலும் பிரார்த்தனை நடத்தினார். 






யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்:


அர்னால்ட் டிக்ஸ் நிலத்தடி சுரங்கப்பாதை பணிகளில் உலகின் முன்னணி நிபுணராக பரவலாக அறியப்படுகிறார். சுவிட்சர்லாந்தில் உள்ள 79 நாடுகளைக் கொண்ட சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி விண்வெளி சங்கத்தின் ஆஸ்திரேலிய தலைவராக உள்ளார். ஒரு பிரச்னைக்கான தீர்வுக்கு இடையே உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கிடையேயான இடைவெளியை திறம்பட கையாள்வதில் அவர் மேம்பட்டவராக உள்ளார். மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கவனித்து, அதற்கான ஆலோசனைகள வழங்குவதிலும் வல்லவராக உள்ளார். மூன்று தசாப்தங்களாக அவரது வாழ்க்கையை பொறியியல், புவியியல், சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற விவகாரங்களில் அர்ப்பணித்துள்ளார்.


கவனம் ஈர்த்த செயல்பாடுகள்:



  • 2008 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சுரங்கப்பாதை அமைப்பு அவரை சமகால உலக சுரங்கப்பாதை சிக்கல்கள் குறித்த மதிப்புமிக்க ஹார்டிங் விரிவுரையை வழங்க அழைப்பு விடுத்தது.

  • ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சுரங்கப்பாதை பாதுகாப்பு விவகாரங்களில் அத்துறை நிபுணராக விரிவான அறிக்கையை வழங்க, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சுரங்கப்பாதை பாதுகாப்பு குழு அர்னால்ட் டிக்ஸிற்கு அழைப்பு விடுத்தது.

  • ஆஸ்திரேலியாவில் சுரங்கப்பாதை நிபுணர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவம் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் அர்னால்டுக்கு வழங்கப்பட்டது.


  • அமெரிக்காவின் மதிப்புமிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் ஃபயர் ப்ரொடெக்சன்ஸ் நிலத்தடி சாலை மற்றும் ரயில் கமிட்டிகளில் பணியாற்ற அர்னால்ட் அழைக்கப்பட்டார்.  இந்த திட்டமானது உலகின் பெரும்பகுதி நிலத்தடி சாலை மற்றும் ரயில் அமைப்புகளுக்கான பாதுகாப்பு தரங்களுக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.



  • 2020 ஆம் ஆண்டில் லார்ட் ராபர்ட் மெய்ர் மற்றும் கெளரவ பீட்டர் விக்கேரி க்யூசி ஆகியோருடன் சேர்ந்து அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்களை அர்னால்ட் டிக்ஸ் உருவாக்கினார்.