Modi Speaks Uttarkashi Workers: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.


தொழிலாளர்களை நலம் விசாரித்த பிரதமர் மோடி:


உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கி 17 நாட்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட, 41 தொழிலாளர்களும் சின்னாலிசூரில்  உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, அவர்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்புகொண்டும், 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டதற்காக வாழ்த்துகளை தெரிவித்தார்.






பிரதமர் மோடி டிவீட்:


முன்னதாக மீட்பு பணி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “சில்க்யாரா சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்ட மீட்புப் பணியாளர்களின் துணிச்சலையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கடந்த 16 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளீர்கள். உத்தர்காசியில் எங்கள் தொழிலாளர் சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களே உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது” என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.


மீட்கப்பட்ட தொழிலாளர்கள் விவரங்கள்:


மீட்கப்பட்டவர்களில் விஸ்வஜித் குமார். சுபோத் குமார், ராஜேந்திர பேடியா. சுக்ரம், டிங்கு சர்தார், குணோதர். சமீர், ரவீந்திரன். ரஞ்சித், மகாதேவ், புக்ட்டு முர்மு,ஜம்ரா ஓரான் விஜய் ஹோரோ, கணபதி ஆகியோர்  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.  கப்பர் சிங் நேகி மற்றும் புஷ்கர்  ஆகிய இருவரும் உத்தராகண்டை சேர்ந்தவர்களாவர். சபா அகமது, சோனு சா. வீரேந்திர கிஸ்கூ மற்றும் சுஷில் குமார் ஆகியோரை பீகாரைச் சேர்ந்தவர்கள்.  மணிர் தாலுக்தார். சேவிக் பகேரா மற்றும் ஜெய்தேவ் பர்மானிக் ஆகியோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அகிலேஷ் குமார், அங்கித். ராம் மிலன், சத்ய தேவ், சந்தோஷ். ஜெய் பிரகாஷ் . ராம் சுந்தர் மற்றும் மஞ்சித் ஆகியோர் உத்தரபிரதேச மாநிலத்தையும்,  தபன் மண்டல், பகவான் பத்ரா, விசேஷர் நாயக், ராஜு நாயக் மற்றும் திரேன் ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். சஞ்சய் மற்றும் ராம் பிரசாத் அசாமையும், விஷால் என்பவர் ஹிமாச்சலப் பிரதேசத்தையும்  சேர்ந்தவர்கள் ஆவர்.