தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாதயா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர், "அரசு பணிகளில் இருப்பவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு போட்டியிட வழிவகுக் கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு சட்டவிரோதமானது.


எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 8 மற்றும் 9-வது பிரிவுகளை நீக்கி, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.தண்டனை பெற்றவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கவும், கட்சியில் முக்கிய பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். அத்துடன், தேர்தலில் போட்டியிட குறைந்தப்பட்ச கல்வி, அதிகப்பட்ச வயது ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.


அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஒரு முக்கியமான கேள்வியை மத்திய அரசுக்கு  முன்வைத்தார்.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் முடிவு எடுக்காத வரை, தேர்தல் ஆணையத்தை நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலி போட்டியிட தடை விதிக்குமாறு கூற முடியாது என்றார்.
அதற்கு, கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், எஸ்.வி.ராஜூ இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.


2017ல், தேர்தல் ஆணையம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதித்தது. ஆனால், பின்னர் தேர்தல் ஆணையம் தனது தடை உத்தரவை திரும்பப் பெற்றது. நிரந்தரத் தடையை விரும்பவில்லை அதே வேளையில் அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் இல்லாமல் இருப்பதை ஒரு வரையறை வகுத்து தடுக்க விரும்புவதாக மட்டும் தெரிவித்தது. 


கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு உப்பாதயாவின் மனுவை மத்திய அரசு எதிர்த்தது. அரசு அதிகாரிகள் பணியாளர்களுக்கான நடைமுறை விதிகளுக்கு உட்பட்டவர்கள், ஆனால், எம்.பி. எம்.எல்.ஏ.,க்கள் அப்படி எந்த ஒரு நிபந்தனைகளாலும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று தெரிவித்தது.