ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமானவர் சந்திரபாபு நாயுடு. இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியான இவரை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊழல் வழக்கில் கைது செய்தனர். சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு மீது தற்போது ஆந்திர பிரதேசத்தின் சி.ஐ.டி. போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மது உற்பத்தி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்கு விவரம்:


தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியின் போது மதுபான நிறுவனங்களுக்கு சட்டவிரோதமான அனுமதி வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சந்திரபாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்திரபாபு ஏ-3 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஐடி அதிகாரிகள் ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் சிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


ஏற்கனவே சந்திரபாபு மீது ஆந்திர சிஐடி பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு, அங்கல்லு அல்லர்லா வழக்கு மற்றும் அமராவதி உள்வட்ட சாலை வழக்குகளை சிஐடி பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் விசாரணை கட்டத்தில் உள்ளன. 


 


தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு தாக்கல் செய்த மனு மீதான வாதங்கள் முடிவடைந்தன. இருப்பினும் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மறுபுறம், அவரது முன்ஜாமீன் மீதான தீர்ப்பும் நிலுவையில் உள்ளது.