ஹிமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையின் நடுவே பழுதடைந்த பேருந்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. வைரலாகியுள்ள அந்த வீடியோவில், அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பேருந்தை மக்களோடு சேர்ந்து அமைச்சர் தாக்குரும் தள்ளுவதை காணமுடிகிறது.


பிரேக்டவுன் ஆன பேருந்தை தள்ளிய அமைச்சர்


பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள குமர்வி, ஜந்துடா மற்றும் சதார் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார் அமைச்சர் அனுராக் தக்கூர். அந்த மூன்று பேரணிகளில் உரையாற்றிய அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேசத்தில் அடுத்ததாக அமையப்போகும் பாஜக அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் தரமான சாலைகள் போடப்பட்டு இணைக்கும் என்றார். அங்கு பேசிவிட்டு திரும்பிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் தாக்கூர் வந்த வழியில் இந்தச் சம்பவம் நடந்தது. தாக்குரின் கான்வாய் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போது என்னெவென்று பார்த்த அவரும் மக்களோடு சேர்ந்து தள்ள ஆரம்பித்தார். 






சாலைகளுக்கு முக்கியத்துவம்


மாநிலத்தில் உள்ள யாத்திரை மையங்கள் மற்றும் கோயில்களுக்கு அருகே போக்குவரத்து மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். தொலைதூரத்தில் உள்ள மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நடமாடும் கிளினிக் வேன்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Rain alert: வங்க கடலில் வானிலை மாறுது..! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! காட்டாறாக பெய்ய போகுது கனமழை!


தேர்தல் வாக்குறுதிகள்


பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 33% இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் போது ரூ.51,000 வழங்கப்படும் என்றும் தாக்கூர் கூறினார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும் என்றும், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் தாக்கூர் தெரிவித்தார்.



வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் காங்கிரஸ்


கடந்த எட்டு ஆண்டுகளில் 12,000 கிமீ நீளமுள்ள கிராமப்புறச் சாலைகளை இமாச்சலில் உள்ள "டபுள் இன்ஜின்" அரசாங்கம் கட்டமைத்துள்ளது என்றும், நவீன வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லியுடன் மாநிலம் இணைக்கப்பட்டது என்றும் தாக்கூர் கூறினார். காங்கிரஸ் மீது தனது குற்றச்சாட்டுகளை வைத்த தாக்கூர், மாநிலத்தில், குறிப்பாக பிலாஸ்பூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களைக் காங்கிரஸ் கட்சி முடக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். 1,470 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் திட்டத்துக்கு நாங்கள் அனுமதி அளித்தோம், ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்கு நிலம் ஒதுக்கவில்லை. 2010ல், மாநிலத்திற்கு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்க அப்போதைய பாஜக அரசு முன்மொழிந்தது", என்றும் தாக்கூர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.