இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவு வாகன (Reusable Launch Vehicle) ரன்வே லேண்டிங் சோதனையை நடத்தவிருக்கிறது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள சோதனை தளத்தில் இருந்து சோதனை நடைபெரும் என்று இஸ்ரோ சேர்மன் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.


இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், நாங்கள் சாதகமான வானிலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். வானிலை சாதகமாக அமையும்போது சோதனையை நடத்துவோம் என்றார். இந்த சோதனைக்கு தேவையான லேண்டிங் கியர், பாராசூட், ஹூக் பீம் அசெம்ப்ளி, ரேடார், ஆல்டிமீட்டர், சூடோலைட் ஆகியனவற்றை தயார்நிலையில் வைத்துள்ளதாக இஸ்ரோ வட்டாரம் தெரிவிக்கின்றது.


விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இவ்வாறு வீணாவதை தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்துகிறது.


இந்நிலையில் இதே போன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியது. ஆர்.எல்.வி டிடி ராக்கெட் 2016ல் சோதனை முறையில் ஏவப்பட்டது.


இந்திய விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளாக தீவிர முயற்சிக்கு பின் உருவாக்கப்பட்ட விண்கலம் விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.


இந்நிலையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவு வாகன (Reusable Launch Vehicle) ரன்வே லேண்டிங் சோதனையை நடத்த இஸ்ரோ ஆயத்தமாகி வருகிறது.


சோதனை எப்படி நடத்தப்படும்?


இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ள தகவலின்படி, ஆர்எல்வியை ஒரு ஹெலிகாப்டர் மூலம் 3 முதல் 5 கிலோமீட்டர் உயரத்துக்கு எடுத்துச் சென்று அதனை ரன்வேயில் இருந்து 4 முதல் 5 கிமீ தொலைவில் இருந்து ஹரிசான்டல் வெலாசிட்டியில் செலுத்தப்படும். அவ்வாறு விடுவிக்கப்பட்ட பின்னர் ஆர்எல்வி ரன்வேயை நோக்கி பாயும். சுயமாகவே லேண்டிங் கியர் செயல்படுத்தப்பட்டு லேண்ட் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான மறுபயன்பாட்டுக்குரிய முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் 2016ல் ஏவப்பட்டபோது அது இதுபோன்று ரன்வே லேண்டிங் செய்யும்படி வடிவமைக்கப்படவில்லை. அதனால் அப்போது அந்த வாகனம் கடலில் தான் தரையிறங்கியது. அதனை RLV TD HEX 01 (Hypersonic Flight Experiment 01) தொழில்நுட்பத்தில் செயல்பட்டது. இபோது  RLV LEX மிஷன் அரங்கேறவுள்ளது. இது வெற்றிகரமான நடந்து முடிந்தால் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இதுவும் ஒரு மைல்கல்லாக இருக்கும்.