டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆயிரக்கணக்கில் சுவரொட்டி ஓட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து, காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அச்சக உரிமையாளர்கள் ஆவர்.


டெல்லியில் பரபரப்பு:


டெல்லியில் நேற்று தொடங்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 போஸ்டர்களை காவல்துறையினர் அகற்றி உள்ளனர். "மோடியை அகற்றுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்" என்ற வாசகம் பெரும்பாலான சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது.


இதுகுறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில், "பொது சொத்தை களங்கம் செய்ததற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டத்தின் படி, அச்சகத்தின் பெயர் சுவரொட்டியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மீறல்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 


இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 138 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மோடி எதிர்ப்பு சுவரொட்டி ஓட்டியதற்காககாக மட்டும் 36 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.


ஆயிரக்கணக்கான சுவரொட்டி:


ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 2,000 போஸ்டர்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மத்திய டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் வேனை மறித்து சோதனையிட்ட போது அந்த சுவரொட்டிகளை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சுவரொட்டிகளை ஆம் ஆத்மி தலைமையகத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டதாக ஓட்டுநர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, போஸ்டர்களில் அப்படி என்ன ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது. இது மோடி அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் சாடியுள்ளது.


இதுகுறித்து விளக்கம் அளித்த கைது செய்யப்பட்ட அச்சக உரிமையாளர்கள், "மோடியை அகற்றுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என வாசகம் இடம்பெற்ற சுவரொட்டியை அச்சிட கோரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்தன" என்றனர்.


இந்த விவகாரம், பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையெ வார்த்தை போர் உருவாக காரணமாக மாறியுள்ளது. சுவரொட்டிகளை ஒட்டும்போது ஆம் ஆத்மி சட்டத்தை பின்பற்றவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


இதுகுறித்து டெல்லி பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் குரானா கூறுகையில், "போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்ல ஆம் ஆத்மிக்கு தைரியம் இல்லை. போஸ்டர் ஒட்டும்போது சட்டத்தை மீறி உள்ளனர்" என்றார்.


இதையும் படிக்க: IND vs AUS 3rd ODI Score Live Updates India vs Australia Cricket Match Commentary Live Telecast Online | Ind vs Aus 3rd ODI LIVE: விக்கெட்டுகள் விழுந்தாலும் சீராக இருக்கும் ரன்ரேட்; ஆஸி., 38 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்ப்பு..!