15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை ராஜஸ்தானின் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது.
ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஹேமந்த் பிரியதர்ஷி கூறுகையில் “மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமலாக்கத்துறை அதிகாரி நேவல் கிஷோர் மீனா ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இம்பாலில் புகார்தாரரின் சொத்தை பறிமுதல் செய்யாததற்கும், இம்பாலில் சிட்பண்ட் மோசடியில் அவரை கைது செய்யாததற்கும் லஞ்சம் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள ஏசிபி துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் ரவி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நேவல் கிஷோர் மீனா மற்றும் அவரது நண்பர் பாபுலால் ஆகியோர் 15 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
நேவல் கிஷோர் மற்றும் பாபுலால் மீனா இருவரும் ஜெய்ப்பூரில் உள்ள பஸ்ஸியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்” எனத் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் பிரியதர்ஷி கூறினார்.