மதவாதத்திற்கு பதில் மதச்சார்பின்மை தானே தவிர இன்னொருவிதமான மதவாதம் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.


ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் தையல் கடைக்காரர் ஒருவரை இருவர் கொலை செய்து, அந்த வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றி, இஸ்லாத்தின் மீதான களங்கத்திற்குப் பழி வாங்கியதாகக் கூறியிருந்தனர். 
உதய்பூர் படுகொலை விவகாரத்தில் ரியாஸ் அக்தாரி, கௌஸ் முகமது ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வெளியிட்டிருந்த வீடியோவில், உயிரிழந்த கண்ணையா லாலின் தலையை இருவரும் வெட்டியதோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் மிரட்டியுள்ளனர். 


சமீபத்தில் முகமது நபி குறித்து வெறுப்புப் பேச்சுக்காக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவையும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த தையல் கடைக்காரர் கண்ணையா லால் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டதற்காக அப்பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மதவாதம் என்பது மனிதனின் கடைசி துளி மாண்பை முற்றிலுமாக வழித்தெடுத்துவிடும். உதய்பூரில் மதவாதத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை, தேசத்திற்கு தற்போதிருக்கும் மிகப்பெரிய சவால் மதவாதத்தைக் கட்டுப்படுத்துவதே என்று தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. ஒரு மதவாதத்திற்கு பதில் சொல்ல இன்னொரு மதவாதம் வழி அல்ல. மதவாதத்திற்கு பதில் மதச்சார்பின்மை மூலமாகத் தான் சொல்லப்பட வேண்டும். அதனால், மதச்சார்பின்மையை மதிக்கும் அனைத்து மதத்தினரும், மத அமைப்புகளும் உதய்பூர் சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நமது தேசம் மதவாத சக்திகளுக்கு அடிபணிந்துவிடாது என்பதை நாம் நிரூபிக வேண்டும். அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஹனுமன் ஜெயந்தியின்போது கலவரம் நடந்த டெல்லி ஜஹாகிங்கிர்புரி பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதய்பூர் சம்பவத்தை அடுத்து அங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய, ஜனநாயக அமைப்புகள் இந்தப் படுகொலையைக் கண்டித்து வரும் நிலையில், அஜ்மீர் தர்கா திவான் ஜைனுல் ஆபிதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எந்த மதமும் மனிதத்திற்கு எதிராக வன்முறையை ஏற்பதில்லை. குறிப்பாக, இஸ்லாம் மதத்தில் அமைதி மட்டுமே போதிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.