ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் தையல் கடைக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து, அஜ்மீர் தர்கா திவான் ஜைனுல் ஆபிதீன் அலி கான் அறிக்கை விடுத்துள்ளார். அதில் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் இங்கு தாலிபான் சிந்தனையை அனுமதிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 


ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் தையல் கடைக்காரர் ஒருவரை இருவர் கொலை செய்து, அந்த வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றி, இஸ்லாத்தின் மீதான களங்கத்திற்குப் பழி வாங்கியதாகக் கூறியிருந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய, ஜனநாயக அமைப்புகள் இந்தப் படுகொலையைக் கண்டித்து வரும் நிலையில், அஜ்மீர் தர்கா திவான் ஜைனுல் ஆபிதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எந்த மதமும் மனிதத்திற்கு எதிராக வன்முறையை ஏற்பதில்லை. குறிப்பாக, இஸ்லாம் மதத்தில் அமைதி மட்டுமே போதிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் தனது அறிக்கையில் அவர், `இணையத்தில் பரவும் இந்தக் கொடூர வீடியோவில் நெறியற்றவர்கள் பாவப்பட்ட மனிதர் ஒருவர் மீது நிகழ்த்தும் வன்முறையை இஸ்லாம் நிச்சயமாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் வன்முறையின் பக்கம் செல்லும் குழுக்களுக்குச் சொந்தமானவர்கள். இந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் தாய்நாட்டில் தாலிபான் மனநிலை உருவாவதற்கு அனுமதியளிக்க மாட்டார்கள்’ எனவும் கூறியுள்ளார். 







இந்தப் படுகொலையை ஜமாத் உலமா எ ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலான ஹகிமுத்தீன் காசிமி கண்டித்துள்ளார். தனது கண்டனத்தில், `இந்தச் சம்பவத்தை யார் செய்திருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது இந்த மண்ணின் சட்டத்திற்கும், நம் மாதத்தின் சட்டத்திற்கும் எதிரானது. நம் நாட்டில் சட்ட நடைமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார். 


உதய்பூர் படுகொலை விவகாரத்தில் ரியாஸ் அக்தாரி, கௌஸ் முகமது ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வெளியிட்டிருந்த வீடியோவில், உயிரிழந்த கண்ணையா லாலின் தலையை இருவரும் வெட்டியதோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் மிரட்டியுள்ளனர். 


சமீபத்தில் முகமது நபி குறித்து வெறுப்புப் பேச்சுக்காக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவையும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த தையல் கடைக்காரர் கண்ணையா லால் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டதற்காக அப்பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.