ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.


உயிர்களை பலி கேட்கும் நீட் தேர்வு:


இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் கோட்டாவில் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இருக்கின்றன.


இதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து எல்லாம் மாணவர்கள் அங்கு வந்து படிப்பது உண்டு. ஆனால், கடும் மன அழுத்தம் காரணமாக, நீட் தேர்வு பயற்சிக்கு தயாராகி வரும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது கோட்டாவில் அதிகளவில் நடந்து வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, கோட்டாவில் மற்றொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர், மிர்சாபூரை சேர்ந்த அசுதோஷ் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கோட்டாவில் தொடரும் தற்கொலைகள்:


தாதாபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அவரது அறையில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சௌராசியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலம் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் வந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


சௌராசியாவின் குடும்ப உறுப்பினர்கள், அவரை தொடர்பு கொள்ள முயன்றும், எந்த பதிலும் கிடைக்காததால், அவர்களின் PG உரிமையாளரிடம் விசாரித்திருக்கின்றனர். பின்னர், சௌர்சியாவின் அறையை PG உரிமையாளர் தட்டியுள்ளார். ​​ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை.


பின்னர், அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று, 11.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அறையின் கதவுகளை உடைத்து திறந்து பார்த்தபோது சௌராசியா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.


கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.