கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் வாழும் 6 முதல் 59 மாதங்கள் வரையிலான வயதுகொண்ட குழந்தைகளிடம் சுமார் 20 சதவிகிதம் வரை ரத்த சோகை ஏற்படுவது குறைந்திருப்பதாகத் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு என்பது மாவட்ட அளவிலான கணக்கெடுப்புகளின் மூலமாக நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள மக்கள்தொகை, உடல்நலம், ஊட்டச்சத்து தரம் முதலானவற்றைக் குறித்த தரவுகளை வழங்குகிறது. சண்டிகர் மாநிலத்தில் `குழந்தைகளுக்கு உணவூட்டும் பழக்கங்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை’ என்ற பட்டியலில் 6 முதல் 59 மாதங்கள் வரையிலான வயதுகொண்ட குழந்தைகளுள் சுமார் 54.6 சதவிகிதம் பேர் ரத்த சோகை கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015-16ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் இதே எண்ணிக்கை 73.1 சதவிகிதமாக இருந்ததும், தற்போது குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் சுமார் 60.3 சதவிகிதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதே வயதுகளைச் சேர்ந்த ஆண்களில் 8.1 சதவிகிதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உடலில் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் சராசரியை விட குறைவாக இருப்பது ரத்த சோகை எனப்படும். மேலும், உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி குறைவதால் ரத்த சோகை ஏற்படுகிறது. ஆண்களுக்கு 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 13.5 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் அளவிலும் ஹீமோக்ளோபின் என்ற சிவப்பு ரத்த அணுக்கள் இருப்பது சராசரி அளவாகும். உடல் உறுப்புகளுக்குத் தேவையாக ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் ரத்த சோகை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாக உடல் சோர்வு, பலமின்மை, தோல் வெளிறியிருப்பது, மயக்கமாக உணர்தல் ஆகியவை ஏற்படுகிறது. ரத்த சோகை பல வகைப்பட்டது என்ற போதும், பெரும்பாலானோர் இரும்புச்சத்துக் குறைபாடுள்ள ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
சண்டிகர் மாநிலத்தின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் தீபக் பன்சால் ரத்த சோகை ஏற்படுவதற்கு இந்தியாவில் பல்வேறு காரணிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
`இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அளவுக்கு அதிகமாக பால் உண்பது முன்னணி காரணம். 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாள்தோறும் 500 முதல் 600 மில்லி லிட்டருக்கு மேல் பால் வழங்கக் கூடாது. அடுத்ததாக குழந்தைகளுக்குக் கூடுதல் உணவுகளை அறிமுகப்படுத்துவதில் ஏற்படும் தாமதமும் மற்றொரு காரணம். 6 மாதங்களைக் கடந்த குழந்தைகள் அதிகமாக திட உணவுகளை உட்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் வழங்க வேண்டும்’ என மருத்துவர் தீபக் பன்சால் கூறியுள்ளார்.
இரும்புச்சத்துக் குறைபாடுள்ள ரத்த சோகை சுமார் 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மேலும், பதின் வயதுகளில் வளர்ச்சிக்குத் தேவையான போதிய இரும்புச் சத்து இல்லாத போதும் இது ஏற்படுகிறது. இதனைத் தடுப்பதற்காக இரும்புச் சத்துகளைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.