ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சண்டையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை நேற்று வெளியிட்டனர். இதனால், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வருவதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றியுள்ள காரணத்தால், நாட்டு மக்களும், அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.


காபூல் விமானநிலையத்தில் இருந்து பயணிகள் விமானங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்து நிறுவனமான டோலோ செய்தி நிறுவனம் நேற்று தகவல் தெரிவித்திருந்தது. ஏற்கனவே 129 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் ஒரு விமானம் இந்தியாவில் இருந்து காபூல் செல்ல இருந்தது. ஆனால், காபூல் விமானநிலையத்தில் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதில் சிக்கல் இருந்தது. 


பண மழையில் நனையும் தலிபான்கள்... இவ்வளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?



இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க, C-17 வகை இந்திய ராணுவ விமானம் காபூல் விமான நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. காபூல் விரைந்த அந்த விமானம், 120 இந்தியர்களை மீட்டு இன்று இந்தியா திரும்பி உள்ளது. 


அந்த விமானத்தில், இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உட்பட பிற இந்திய அதிகாரிகள் நாடு திரும்பி உள்ளனர். மேலும், தற்போதைக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசு உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டுடனான உறவுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப ‘அவசரக்கால எலக்ட்ரானிக் விசா’ முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், விரைவாக விசா வழங்கப்பட்டு நாடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






முன்னதாக, காபூல் நகரில் பதற்ற சூழல் நிலவி வருவதால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனால், காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.  கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


”தூக்கம் வரல.. அமைதி வேணும்” - சொந்த நாட்டை நினைத்து சோகத்தில் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்