ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’.  இதெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் தானா என கண்டுபிடிக்க முடியாத அளவிலான, அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் எடுக்கப்பட்ட அப்படம்,  உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த திரைப்படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளையும் பெற்றது. தற்போது அவதார் 2ம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.


மாரடைப்பால் மரணம்


இந்நிலையில், ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனு, சமீபத்தில் வெளியான அவதார் 2 படத்தை பார்ப்பதற்காக தனது சகோதரர் ராஜுவுடன் பெத்தபுரத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்றார்.  படத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீனு திடீரென சரிந்து விழுந்தார். அவரது தம்பி ராஜூ உடனடியாக அவரை பெத்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  உயிரிழந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனுவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்னதாக தைவானில் 42 வயதுடைய நபர் ஒருவர் 2010ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை  பார்த்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த நபருக்கு இரத்த அழுத்தம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர், திரைப்படத்தை பார்த்தபோது இருந்த அதிகமான உற்சாகம் அவரது மாரடைப்பு அறிகுறிகளை தூண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


அவதார் 2 


இதனைத் தொடர்ந்து அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர்  ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் இந்தியாவில் கடந்த 16ம் தேதி வெளியானது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், ஏறக்குறைய 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.


படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவ அதிகாலை காட்சிகளுக்கே ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ஏற்கனவே பார்த்த அவதார் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் கதைக்களமும், விஷூவல் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. தமிழ் டப்பிங் பார்க்க சென்ற மக்களுக்கு சமகாலத்தில் பேசப்படும் வார்த்தைகளும் இடம் பெற்றிருந்ததால் கலகலப்பாக அவதார் படம் அமைந்தது. 


 




மேலும் படிக்க


Watch Video: ஜூராசிக் பார்க் பட பாணியில் உலகை எட்டிப் பார்த்த ’பிளாக் டிராகன்’!