இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.


"நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர், இரண்டு பேர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளனர்" என்று கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.


விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.