ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் ஆபத்தான நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் முடிந்தவுடன் ஒரே நேரத்தில் ஏராளமானோர் வெளியேற முயன்றதால், நெரிசலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும், தீயணைப்பு மீட்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கந்துகுரு சட்டசபை தொகுதியில் இன்று மாலை சாலையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் பல தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. முன்னணி தெலுங்கு செய்தி நிறுவனம் ஒன்று இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியை ஒளிபரப்பு செய்துள்ளது.
இதனால், கூட்டத்தை பாதியில் நிறுத்திய சந்திரபாபு, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட மருத்துவமனைக்குச் சென்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள சந்திரபாபு, தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.