ஒலிம்பிக் போட்டித்தொடர்:


ஒட்டுமொத்த உலக நாடுகளும் பங்கேற்கும் விளையாட்டு போட்டியாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டியில் கடந்த முறை 206 நாடுகள் பங்கேற்றன. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ஒலிம்பிக் 2021ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடத்தப்பட்டது.


2024ஆம் ஆண்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் 2028ஆம் ஆண்டு, அமெரிக்காவிலும் 2032ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளை நடத்துவது என்பதே ஒரு கெளரவம்தான். இந்தியாவை பொறுத்தவரை, ஆசிய விளையாட்டு போட்டிகளை இரண்டு முறையும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை ஒரு முறையும் நடத்தியுள்ளது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதே இல்லை.


குஜராத்தில் ஒலிம்பிக்கா..?


இந்நிலையில், 2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை கேட்க இந்தியா தயாராக உள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 


பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஏலத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை ஆதரிக்க இந்திய அரசு தயாராக உள்ளது. மேலும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை இந்தியா பெற்றால் குஜராத் மாநிலத்தில் போட்டிகளை நடத்தலாம்" என்றார்.


இந்தியா தயார்:


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஜி-20 அமைப்பின் மாநாட்டை இவ்வளவு பெரிய அளவில் இந்தியா நடத்த முடிந்தால், இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அரசாங்கம் களமிறங்கும் என்று நான் நம்புகிறேன். 


2032 ஆம் ஆண்டு வரை, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், 2036 முதல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், இந்தியா ஒலிம்பிக்கிற்கு முழுமையாக தயாராகி ஏலம் எடுக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்" என்றார்.


ஊக்குவிக்க முயற்சி:


2036ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தயார் நிலை குறித்து பேசிய அவர், "அதற்கு சாதகமாக ஏலம் எடுக்க இந்தியா தயாராக உள்ளது. நாம் இல்லை என்று சொல்ல எந்த காரணமும் இல்லை. விளையாட்டை ஊக்குவிக்க இந்தியா இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்கிறது என்றால், நாங்கள் ஒலிம்பிக்கை நடத்துவது மட்டுமல்ல, பெரிய அளவில் நடத்துவோம் என்று உறுதியளிக்கிறேன். 


விளையாட்டுப் போட்டிகளை நடத்த இதுவே சரியான நேரம். உற்பத்தித் துறை முதல் சேவைகள் வரை எல்லாத் துறைகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றால், ஏன் விளையாட்டில் இல்லை? 2036 ஒலிம்பிக் போட்டிக்கான ஏலத்தில் இந்தியா மிகவும் தீவிரமாக உள்ளது.


ஒலிம்பிக் போட்டிகளை நடத்த குஜராத் பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களுக்கு உள்கட்டமைப்பு உள்ளது. ஏலத்தில், குஜராத் அரசு தீவிரமாக உள்ளது. குஜராத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது மாநில அரசின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும்" என்றார்.