அண்டை மாநிலமான ஆந்திராவில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. வெயில் காலம் நெருங்க நெருங்க மின் பயன்பாடு அதிகரிப்பதால், மின் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. முக்கியமான நகரங்களிலேயே மின்வெட்டு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் மின்தட்டுப்பாட்டை நீக்கி, மக்களின் துயரை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மின்வெட்டினால் அரசு மருத்துவமனையே இருளில் மூழ்கியதால் பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்களும், பிரசவத்துக்காக வந்துள்ள கர்ப்பிணிப்பெண்களும் கொசுக்கடியில் தவித்து வருகின்றனர்.



இந்நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் தங்களின் செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். சாமர்த்தியமாகச் செயல்பட்ட மருத்துவர்கள் கைகளிலிருந்த செல்போன் டார்ச்சை பயன்படுத்தியே பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து முடித்துவிட்டனர். அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் அந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த பெண்களும், கை குழந்தையுடன் சிகிச்சை பெற்றுவந்த பெண்களும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனையில் ஜெனெரேட்டர் இயங்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், இந்த மருத்துவனையில் பெரிய வசதிகள் எதுவும் இல்லை. அங்கு இருக்கும் ஜெனரேட்டர் கூட பழுதடைந்துள்ளது. மின்வெட்டு காரணமாக நோயாளிகள் கொசுகடியால் தவித்து வருகின்றனர். இந்த மருத்துவமனை ஒரு நரகம் போல் உள்ளது என தெரிவத்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறிய விளக்கத்தில், "மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு சில மணி நேரம் இன்வெட்டர் ஜெனரேட்டர் செயல்பட்டது. ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் வராததால் ஜெனரேட்டர் பழுதடைந்தது.மேலும் ஜெனரேட்டருக்கான டீசலும் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.