ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்துடன் அவர் முந்தைய ஆட்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்த சில திட்டங்களை நிறுத்தியும் மாற்றி அமைத்தும் வருகிறார். 


முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் அண்ணா உணவகத்தை தொடங்கி வைத்திருந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் உணவகங்கள் தொடங்கப்பட்டு வந்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அண்ணா உணவகம் திட்டத்தை ரத்து செய்தது. 


இந்தச் சூழலில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியில் அண்ணா உணவகம் ஒன்றை திறந்து வைக்க முறப்பட்டுள்ளார். அந்த உணவகத்திற்கான கட்டடம் ஒன்று குப்பம் தொகுதியில் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை ஆந்திர அரசு ரத்து செய்துள்ள காரணத்தால் அந்தக் கட்டடத்தை ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


 






இதைத் தொடர்ந்து தன்னுடைய சொந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அந்தத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். 


அதில், “குப்பம் தொகுதிக்கு இது ஒரு கருப்பு நாள். இந்த அளவிற்கு குப்பம் தொகுதியில் ரவுடிகள் அட்டூழியம் இருந்ததில்லை. இதை திரும்ப செய்ய எங்களுக்கு அதிக நேரம் எடுக்காது. இங்கே 60 ஆயிரம் காவல்துறையினர் உள்ளனர். ஆனால் எனக்கு ஆதரவாக 60 லட்சம் உள்ளூர் ஆதரவாளர்கள் உள்ளனர்” எனக் கூறினார். இதன்காரணமாக குப்பம் தொகுதியில் பதற்றமான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மோதிர ரகசியத்தை உடைத்த சந்திர பாபு:


தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதும் மஞ்சள் நிற சட்டை, வெள்ளை  பேண்ட், பையில் ஒரு பேனா ஆகியவற்றுடன் எப்போதும் எளிமையாக காட்சியளிக்கும் தலைவர் ஆவார். ஆனால் இந்த நிலையில் சமீப காலமாக அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரம் ஒன்று காணப்படுகிறது. இதுவரை மோதிரம், தங்க சங்கிலி ஆகி உள்ளிட்ட எவ்விதமான ஆபரணங்களையும் அணிந்த நிலையில் காணப்படாத சந்திரபாபு நாயுடு, தற்போது மோதிரம் ஒன்றுடன் காணப்படுவது காட்சி தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்காக ஜோசியர்கள் சொன்ன அறிவுரையின்படி அவர் மோதிரம் அணிந்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மதன பள்ளியில் நடைபெற்ற தெலுங்கு தேச கட்சியின் மினி மாநாடு நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு அந்த மோதிரம் பற்றிய உண்மையை வெளிப்படுத்தினார். அப்போது அவர் இது மோதிரம் கிடையாது. என்னுடைய உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர். இந்த கருவி நான் சாப்பிடும் நேரம், எத்தனை மணி நேரம் தூங்கினேன், எத்தனை தூரம் நடந்தேன், எத்தனை நேரம் ஓய்வெடுத்தேன் என்பது பற்றிய என்னுடைய நடவடிக்கைகள் பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் என்னுடைய உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது, ரத்த அழுத்தம் எப்படி உள்ளது உள்ளிட்ட என்னுடைய உடல்நிலை தொடர்பான தகவல்கள் கண்காணிக்கும்.