ஆந்திராவில் மாநகராட்சி கூட்டத்தில், எந்த வேலையும் செய்ய முடியாததால், மனமுடைந்த கவுன்சிலர் ஒருவர், காலணியால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் நகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் ராமராஜு வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேயரிடம் தொடர்ந்து பலமுறை முறையிட்டும் தனது தொகுதிக்கு எந்தவொரு நலத்திட்டத்தையும் அடிப்படை வசதிகளையும் செய்யமுடியாததால் இறுதியில் இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் கவுன்சிலர் ராமராஜூ.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர், தேர்தல் முடிந்து 30 மாதங்களாகியும், வார்டில் உள்ள குடிமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண எந்த பணியும் செய்ய முடியவில்லை என வேதனையாக தெரிவித்தார்.
இந்த நிலைக்கு தன் தலைவிதியையே காரணம் காட்டி, ராமராஜூ செருப்பை எடுத்து கன்னத்தில் அடித்துக்கொண்டுள்ளார். செருப்பால் அடிப்பதை நிறுத்துமாறு மற்ற கவுன்சிலர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். ஆனால் அவர் வெகு நேரம் செருப்பால் தன்னைத் தானே அடித்து காயப்படுத்திக் கொண்டார். இறுதியில் பேச்சை முடிக்கும் போது மைக்கை மேசை மீது வீசினார்.
தனது வார்டில் குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என தெலுங்குதேசம் கட்சியின் கவுன்சிலர் தனது உரையின் போது கூறியுள்ளார்.
இதுகுறித்த வீடியோவை தெலுங்கு தேசம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.