ஆந்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது சிஐடி காவல்துறையினர் முதல் தகவலறிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரபிரதேசத்தின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மங்களகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ண ரெட்டி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரமாநில தலைநகர் அமராவதி உருவாக்கத்தின் திட்டம் மற்றும் வெளிவட்டச்சாலை ஆகியவற்றில் சில தனிநபர்களின் நன்மைக்காக முறைகேடான மற்றும் ஊழல் நடவடிக்கைகள் அரசு உயர் அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த புகாரின் மீது விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பி நாராயணா, ஹெரிடேஜ் நிறுவனம், உள்ளிட்ட 12 பேர் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 120பி, 420, 34,35,36,37,166,167 மற்றும் 217 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் கீழ் 13(2), 13(1)(a) ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



s


முன்னாள் அமைச்சர் நாராயணா எஸ்எஸ்சி பேப்பர் வெளியான வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கும், நாராயணா கைது செய்யப்பட்டிருப்பதற்கும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நர லோகேஷ்  கண்டனம் தெரிவித்துள்ளார். 




இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் எதிர்கட்சித் தலைவர்கள் மீது செய்யப்படும் முடிவே இல்லாத அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி தான் இது என்று கூறியுள்ளார். மேலும், தங்கள் தோல்விகளை மறைக்க தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை கைது செய்வது மோசமான பழிவாங்கல் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.