டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு எழுதிய பதிவில் டெல்லியில் `முகலாயர் காலத்து அடிமைச் சின்னங்களாக’ இருக்கும் சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதேஷ் குப்தா, `டெல்லி முனிசிபல் கவுன்சில் சேர்மனுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி சாலைகளில் முகலாயர்க்ளின் பெயர்கள் அடிமைத்தனத்தை அடையாளப்படுத்துவதாகவும் அவை நீக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். 


இதில் அவர் தன்னுடைய பரிந்துரைகளாக, `துக்ளக் சாலையை குரு கோபிந்த் சிங் மார்க் எனவும், அக்பர் சாலையை மஹாரானா பிரதாப் சாலை எனவும், அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை எனவும், ஹுமாயுன் சாலையை மஹரிஷி வால்மிகி சாலை எனவும், ஷாஜஹான் சாலையை ஜெனரல் பிபின் சிங் ராவத் சாலை எனவும் மாற்றப்பட வேண்டும்’ எனவும் கூறியுள்ளார். 



கடந்த மாதம், டெல்லி நகரத்தில் உள்ள சுமார் 50 கிராமங்களில் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் டெல்லி பாஜக தலைவர் அகேஷ் குப்தா கூறியிருந்தார். `இந்த கிராமங்களில் இருந்து தங்கள் கிராமத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுகின்றன. நாங்கள் மேயர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் பெயர் மாற்றம் கோரி கடிதம் எழுதி வருகிறோம்.. இந்தப் பெயர்கள் அடிமைத்தனத்தின் சின்னம்.. டெல்லி அரசுக்கு இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை கவுன்சிலர்கள் பெற்று அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார். 






இதுகுறித்து பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர், `டெல்லி அரசுக்கு மாநில நிர்வாகத்துறையின் சார்பில் பெயர் சூட்டும் ஆணையம் தனியாக இயங்கி வருகிறது. இவ்வாறான கோரிக்கைகள் எழும் பட்சத்தில், அதன் மீது விசாரணை செய்யப்பட்டு, அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்’ எனத் தெரிவித்துள்ளனர்.



ஒருபக்கம், டெல்லி பாஜக தலைவர் நகரத்தின் சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் டெல்லியின் குதுப் மினார் பகுதியில் போராட்டங்கள் நடத்தியதோடு, குதுப் மினாரின் பெயர் `விஷ்ணு ஸ்டம்ப்’ என மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இந்தப் போராட்டங்கள் நடைபெற தொடங்கியவுடன், `ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டு, காவிக் கொடிகளுடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தை முன்னெடுத்த பாஜக தலைவரான ஜெய் பகவான் கோபால் காலை முதலே வீட்டுச் சிறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.